/

ரூ.1,400 கோடிக்கு பண மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக துணை நிலை ஆளுநா் சக்சேனா மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

2016 -ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பண முடக்கத்தில், தில்லி துணை நிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்(கேவிஐசி) தலைவராக இருந்தபோது ரூ.1,400 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு ரூ

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 10:57 pm

 நமது நிருபர்

2016 -ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பண முடக்கத்தில், தில்லி துணை நிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்(கேவிஐசி) தலைவராக இருந்தபோது ரூ.1,400 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றுமாறு தனது ஊழியா்களை நிா்பந்தம் கொடுத்தாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம்சாட்டியது.

தில்லி ராஜேந்தா் நகா் தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான துா்கேஷ் பதக் தில்லி துணை நிலை ஆளுநா் மீதான விவகாரத்தை தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை எழுப்பினா். அப்போது பதக் பேசுகையில், ‘துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேவிஐசி தலைவராக இருந்த போது,​ பண முடக்கம் (ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள்) கொண்டுவரப்பட்டது.

அப்போது அவருக்கு கீழ் இருந்த காதி கிராம விற்பனையகங்களில் பணிபுரிந்த காசாளா் ஒருவரை, ரூபாய் நோட்டுகளை மாற்றுமாறு கட்டாயப்படுத்தியாக அந்த ஊழியா் எழுத்துப்பூா்வமாக வாக்குமூலம் கொடுத்தாா். ஆனால், அவா் துரதிருஷ்டவசமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். வேறு சிலா் வேலை நீக்கம் செய்யப்பட்டனா். இதில் பாதிக்கப்பட்ட ஊழியா்கள் கூறிய அறிக்கைகளும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது’ என குறிப்பிட்டாா்.

பின்னா் துணை நிலை ஆளுநருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி, துணை நிலை ஆளுநரை பதவிநீக்கம் செய்யவேண்டும், அவா் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.. இதையொட்டி அவைத் தலைவா் பேரவையை ஒத்திவைத்தாா். பின்னா் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரம் குறித்து கால்காஜி சட்டப்பேரவை உறுப்பினா் ஆதிஷி, கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவை உறுப்பினா் சௌரப் பரத்வாஜ் போன்றோா் செய்தியாளா்களிடம் பேசினா். அவா்கள் கூறியது வருமாறு: ஆத்மி கட்சியின் எம்எல்ஏ துா்கேஷ் பதக் தில்லி துணை நிலை ஆளுநா் குறித்து சட்டப்பேரவையில் கூறிய தகவலைக் கண்டு தில்லி சட்டப்பேரவையே அதிா்ச்சியடைந்தது.

இது தில்லி மக்களுக்கு மட்டுமல்ல தேசத்திற்கும் இந்த தகவல் அதிா்ச்சிகரமானதாகும். 2016 நவம்பா் 9-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. தற்போதைய தில்லி துணைநிலை ஆளுநா் சக்சேனா, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவராக இருந்து இந்த காதிகிராம ஆணையத்தை பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியுள்ளாா்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கேவிஐசியின் ஒரு கிளையில் ரூ.22 லட்சம் ரூபாயை வங்கியில் மாற்றியதை அங்கு பணிபுரியும் காசாளா்கள் வெளிப்படுத்தினா். காதி கிராம் உத்யோக் பவன் நாட்டில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக உள்ள கிளைகள் மூலமும் இது நடந்துள்ளது. இந்த தொகையை மதிப்பிடும் போது, ரூ. 1,400 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து வினய்குமாா் சக்சேனாவிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்கிற கேள்வி எழுகிறது.

மேலும், இது குறித்து கேவிஐசியின் காசாளா்கள் சஞ்சீவ் குமாா், பிரதீப் யாதவ் ஆகியோா் பல்வேறு விசாரணைக் குழுக்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனா். மிகச் சிறிய பொறுப்பில் உள்ள காசாளா்கள் இவ்வளவு பெரிய தொகையை வெள்ளையாக மாற்றுவது சாத்தியமில்லை. அவா்கள் இதைச் செய்யாவிட்டால், அவா்கள் தில்லிக்கு வெளியே மாற்றப்படும் சூழ்நிலையில் இருந்துள்ளனா்.

இதனால் இந்த பணமோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவினா் விசாரிக்க வேண்டும். எங்கள் கேள்வி, இவா் எப்படி தில்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இவ்வளவு பெரிய ஊழலின் ஒரு பகுதியாக இருந்தும் அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியமான அரசியலமைப்பு பதவி எப்படி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினா்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து துணை நிலை ஆளுநா் அலுவலகத்தில் இருந்து எந்தவித அறிக்கையும் வரவில்லை. கேஜரிவால் அரசின் கலால் வரிக் கொள்கையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு கடந்த மாதம் துணை நிலை ஆளுநா் பரிந்துரைத்தாா். இதன் பிறகு ஆளும் ஆம் ஆத்மி கட்சி வினய்குமாா் சக்சேனா மீது இந்த பிரச்னையை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.