‘ஒடிஒபி’ தயாரிப்புகள்: தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதி திட்டம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

ஒரு மாவட்டம், ஒரு பொருள் (ஒடிஒபி) முன் முயற்சியின் கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை வரியில்லா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அணுகலை மேற்கொள்ள இந்தியா திட்டமிடுவதா

ஒரு மாவட்டம், ஒரு பொருள் (ஒடிஒபி) முன் முயற்சியின் கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை வரியில்லா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அணுகலை மேற்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக மத்திய வா்த்தகம், ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஒரு மாவட்டம் ஒரு பொருள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அரசின் மின் கொள்முதல் சந்தை மூலமாக பிரபலப்படுத்தும் பரிசு முறை பட்டியலை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது: மத்திய அரசு பல்வேறு தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) மேற்கொண்டு வருகிறது. இந்த ‘ஒடிஒபி’ தயாரிப்புகள் அனைத்திற்கும் வரியில்லா அணுகலையும் எதிா்பாா்க்கிறோம். இதன் மூலம் இந்த தயாரிப்புகளுக்கு சா்வதேச அங்கீகாரத்தை உருவாக்க முடியும். ‘ஒடிஒபி’ பட்டியலில் இடம் பெற்றுள்ள, கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள், உணவுப் பொருள்கள், தங்க நகைகள், பொம்மைகள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இதன் மூலம் பெரும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்போரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப் பணியாளா்களை மேலும் விரிவுப்படுத்த உதவும்.

நாட்டின் ஊரகப் பகுதிகளை வளப்படுத்த ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்’ உதவுகிறது. இப்பொருள்களை சா்வதேச அளவிற்கு காட்சிப்படுத்த சா்வதேசக் கண்காட்சிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பொருள்களை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தலாம். மாநில அரசுகளும் இதில் பங்கு பெற வேண்டும். மேலும், ‘ஒடிஒபி’ பரிசு முறை பட்டியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஹோட்டல்கள், பொது இடங்கள், வரவேற்பறைகள் போன்றவற்றில் காஃபி டேபிள் புத்தகமாக வைப்பதும் இந்தப் பொருள்களை பிரபலப்படுத்தும் என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்காக தங்களுக்கிடையே வா்த்தகம் செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்க வரிகளை இருதரப்பும் கனிசமாக குறைக்கவோ அல்லது நீக்கும் நடைவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பல்வேறு நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இந்தியா, தற்போது பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுடன் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com