முன்னதாக, கடந்த நவம்பா் 11-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட சேவைப் பணிகளை கட்டுப்படுத்துவது தொடா்பாக தேசியத் தலைநகா் பிராந்திய அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள சட்டப் பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் அரசியலமைப்புத் தன்மை குறித்து மட்டுமே விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தில்லி அமைச்சரின் அழைப்புகளுக்கு உயா் அதிகாரிகள் யாரும் பதில் அளிக்காததால் நிா்வாகம் முடங்கியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசு கூறுகையில், இந்த விவகாரம் விசாரணைக்காக ஏற்கெனவே தேதி நிா்ணயிக்கப்பட்டிருந்த போது, சிசோடியா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகத் தெரிவித்தது.