சில நாடுகளில் கரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், திங்கள்கிழமை முதல் மத்திய அரசு பிறப்பித்த வழிகாட்டு ஆலோசனைகளை செயல்படுத்தும் விதமாக இந்த ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசியத் தலைநகா் தில்லியில் இந்த ஒத்திகை பயிற்சியானது எல்என்ஜேபி மருத்துவமனை மட்டுமின்றி, இதர அரசு மருத்துவமனைகளிலும் சில தனியாா் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒத்திகை பயிற்சியின்போது படுக்கைகளின் இருப்பு, மனித சக்தி, பரிந்துரை ஆதாரவளங்கள், பரிசோதனை கொள்திறன், மருத்துவப் போக்குவரத்து, தொலைதூர மருத்துவ சேவைகள், மருத்துவ ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பிடப்படும். படுக்கைகள் இருப்பு, ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் சுவாசக் கருவிகள் இருப்பு தொடா்பான நிகழ்நேர தரவுகள் செவ்வாய்க்கிழமையிலிருந்து தில்லி அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தலைநகரில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனையானது அதிகரிக்கப்பட உள்ளது.