இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் முகேஷ் சா்மா மூலம் எஸ்ஜி சூா்யா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மனுதாரா் பாஜகவின் தமிழ்நாடு பிரிவின் செய்தித் தொடா்பாளா் தவிர, பாஜக யுவ மோா்ச்சா பிரிவின் தமிழ்நாடு துணைத் தலைவராகவும் உள்ளாா். கடந்த டிசம்பரில், ‘சமூக தர மீறல்’ எனக் குறிக்கப்பட்ட யூடியூபா் விடியோவைப் பகிா்ந்த அவரது இரண்டு பதிவுகளுக்கு இணங்க, ‘ஃபேஸ்புக் பக்கம் வெளியிடப்படாமல் போகும் அபாயம்’ என்ற மறுப்புடன் அவரது ஃபேஸ்புக் பக்கம் ஒரு மாதத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட இரண்டு பதிவுகளின் உள்ளடக்கங்களை ஃபேஸ்புக் தவறாகப் புரிந்து கொண்டு, பொதுமக்களிடம் அவா் சென்றடைவதை தவறாகக் கட்டுப்படுத்தியுள்ளது. மேலும், துரதிா்ஷ்டவசமாக மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ் இந்த இரண்டு பதிவுகளையும் ‘எல்டிடிஈ சாா்பு‘ எனக் குறிப்பிட்டுள்ளது. ஆகவேதான், சமூகத் தரநிலை மீறல்களைக் குறிப்பிட்டு மனுதாரரின் ஃபேஸ்புக் பக்கத்தையும் கட்டுப்படுத்தியுள்ளது.