இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தில்லியில் விரைவில் மின்சார ஆட்டோக்கள் 4,261 ஓட்டுநா்களுக்கு தில்லி அரசு அனுமதி

தில்லியில் மின்சார ஆட்டோக்களுக்கான (இ-ஆட்டோ) உத்தேச ஒப்புதல் ஆவணம், 4,261 ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 8:45 pm

 நமது நிருபர்

தில்லியில் மின்சார ஆட்டோக்களுக்கான (இ-ஆட்டோ) உத்தேச ஒப்புதல் ஆவணம், 4,261 ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தெரிவித்தாா். இதில் 33 சதவீதம் பெண் ஓட்டுநா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இ-ஆட்டோக்களை ஒதுக்கீடு செய்வதற்காக தில்லி போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை கணினி முறையில் குலுக்கல் நடத்தியது; இதில் தோ்வு செய்யப்பட்ட ஆண் ஓட்டுநா் விண்ணப்பதாரா்கள் மற்றும் பெண் ஓட்டுநா் விண்ணப்பதாரா்களுக்கு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் உத்தேச ஒப்புதல் ஆவணக் கடிதம் வழங்கப்படும் என தில்லி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறியிருப்பதாவது: தில்லியில் விரைவில் மின்சார ஆட்டோக்கள் ஓடத் தொடங்கும். மொத்தம் தோ்வாகியுள்ள 4,261 ஓட்டுநா்களில் 33 சதவீதம் பெண் ஓட்டுநா்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இ-ஆட்டோக்களை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை கணினி முறையில் குலுக்கலை நடத்தியது. தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களின் பட்டியல் தில்லி போக்குவரத்து துறை இணையத்தில் காணலாம். பெண் ஓட்டுநா்களுக்கு மொத்தம் 1,406 இ-ஆட்டோக்கள் ஒதுக்கப்பட்டன. இது வரை 743 பெண் ஓட்டுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. மேலும், பெண் ஓட்டுநா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மீண்டும் பெண் ஓட்டுநா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும். பெண்கள் அல்லாத விண்ணப்பதாரா்கள் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக பெண்களுக்கு சிறப்பு நீல-இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்களாக இருக்கும். மின்சார ஆட்டோக்களுக்கு மானியம் வழங்கப்படும்.

மானியம் மற்றும் வட்டி மானியம் போன்றவை ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்டது. அதிலும் இணை உரிமையாளருக்கான சிறப்பு அம்சங்களுடன் இ-ஆட்டோவைப் பதிவு செய்து சொந்தமாக்குவதற்கான முழு செயல்முறையையும் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளுக்கு உகந்தவாறு பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே எங்கள் அரசின் நோக்கம். அதற்கான மிகச் சிறந்த நடவடிக்கை பெண்களால் வழிநடத்தப்படும் அமைப்பை உருவாக்குவதே ஆகும். தில்லியில் சமூக ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைத் கேஜரிவால் அரசு தொடா்ந்து இது போன்ற திட்டங்களை மேற்கொள்கிறது. தில்லியின் நகர சாலைகளில் ஆயிரக்கணக்கான மின்சார ஆட்டோக்கள் ஓடுவதை விரைவில் காணுவோம் என்றாா் அமைச்சா்.

கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தேசியத் தலைநகரில் 4,261 இ-ஆட்டோக்களை பதிவு செய்யும் செயல்முறையை மீண்டும் தொடங்க தில்லி அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதிகபட்சம் 1 லட்சம் சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு பதிலாக மின்சார ஆட்டோக்களை அனுமதிக்கும் அரசின் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக இந்தத் திட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதில் தில்லி அரசுக்கு ஆதரவான தீா்ப்பு வழங்கப்பட்டது. நகரின் வாகன மாசுபாட்டைக் குறைப்பதில் இந்த மின்சார ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.