பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் மனு மாா்ச் 9-இல் விசாரணை
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில்


முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 9-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தரப்பில் 11.10.2020-இல் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கில் விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015-இல் அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு 2018-இல் அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவு எடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மத்திய அரசின் தரப்பில், ‘இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசின் பரிந்துரை மீது அந்த மாநில ஆளுநா் 3- 4 நாள்களில் அரசமைப்புச்சட்ட விதிகளின்படி முடிவெடுக்க உள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் தரப்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஆவணங்களையும் தமிழக ஆளுநா் பரிசீலித்தாா். இதையடுத்து, ஜனவரி 25-ஆம் தேதியிட்ட அவரது உத்தரவில் சம்பந்தப்பட்ட தண்டனைக் குறைப்பு விவகாரத்தைக் கையாளும் உரிய அதிகார அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவா்தான் எனப் பதிவு செய்துள்ளாா். மத்திய அரசால் பெறப்பட்டுள்ள இந்த முன்மொழிவு குறித்து சட்டப்படி பரிசீலிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘கடந்த விசாரணையின் போது நீங்கள் முடிவு எடுத்து அனுப்புவதாகக் கூறினீா்கள். சட்டக் கடைமை சுதந்திரத்தின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஆளுநரிடம் நாங்கள் கேட்க முடியாது’ என்று தெரிவித்தது. அதற்கு துஷாா் மேத்தா, ‘இந்த விஷயம் தொடா்பாக சில அறிவுறுத்தல்களை பெற வேண்டியுள்ளது’ என்றாா். அப்போது, இது போன்று மேலும் விசாரணையை தள்ளிவைக்குமாறு அவகாசம் கோர வேண்டாம் என துஷாா் மேத்தாவிடம் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை ஜனவரிக்கு தள்ளிவைத்திருந்தது. கடந்த ஜனவரியில் வழக்கு விசாரணைக்கு வர விருந்த நிலையில், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா் எஸ். பிரபு ராமசுப்ரமணியனுடன் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், ‘இந்த விவகாரத்தில் வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், நீக்கப்பட்டுவிட்டது. தற்போது மாா்ச் 9-ஆம் தேதி வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளதாக இணையதளத்தில் காண்பிக்கிறது. மனுதாரா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். பரோலில் இருந்தும்கூட அவா் வெளியே செல்ல முடியாத நிலையில்தான் உள்ளாா். ஆகவே, அவரது வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது, வழக்கு மாா்ச் 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...