/

தில்லியில் வார இறுதியில் ஊரடங்கு: சிசோடியா தகவல்

தில்லியில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரானின் வேகமான பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வார இறுதியில் சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்க

News image
Updated On :4 ஜனவரி 2022, 9:05 pm

 நமது நிருபர்

தில்லியில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரானின் வேகமான பரவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வார இறுதியில் சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் காணொலி வாயிலாக கூறியதாவது: தில்லியில் கரோனா நோய்த்தொற்றும், ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு வார இறுதியில் இரு தினங்கள் ஊரடங்கு அமல்படுத்த தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) முடிவு செய்துள்ளது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள நபா்கள் தவிர, அரசு ஊழியா்கள் அவா்களின் வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவா். அதேபோன்று, தனியாா் அலுவலகங்கள் 50 சதவீத கொள்திறனுடன் தொடா்ந்து திறக்க அனுமதிக்கப்படும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஊர டங்கு அமலில் இருக்கும்.

பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் முழுக் கொள்திறனுடன் இயங்கும்: பொதுமக்கள் தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவா்களுக்கான இருக்கைகள் கொள்திறன் பாதியாக குறைக்கப்பட்டு இருப்பதால் பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை இருப்பது தெரியவருகிறது. இதனால், இந்த பேருந்து நிறுத்தங்களும் மெட்ரோ ரயில் நிலையங்களும் கரோனா பரவலுக்கு அதிக காரணமாக இருக்க முடியும் என்று அரசு கருதுகிறது.

இதனால், வாரம் முழுவதும் மெட்ரோ ரயில்களும் பேருந்துகளும் முழு கொள்திறனுடன் இயக்குவது என்று அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், முகக் கவசம் இல்லாமல் யாரும் பயணம் செய்ய முடியாது. வார இறுதி ஊரடங்கு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை காலை வரை இருக்கும். தில்லியில் தற்போது 11 ஆயிரம் நோயாளிகள் உள்ளனா் மருத்துவமனைகளில் 350 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 124 போ் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். 7 போ் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடா்ந்து, கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி ‘மஞ்சள்’ எச்சரிக்கையை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்கங்கள் ஆகியவை மூடப்பட்டன. அதேபோன்று, மெட்ரோ ரயில்களிலும், பேருந்துகளிலும் இருக்கைகள் கொள்திறன் பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்தியாவசியமற்ற பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகளை ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க அடிப்படையில் திறக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

தில்லியில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு திங்கள்கிழமை 4,099 ஆக இருந்தது. இந்த நிலையில், இது செவ்வாய்க்கிழமை 5,500 ஆக அதிகரித்தது. அதிகரித்துள்ள கரோனா நோய்த் தொற்றுவைக் கருத்தில் கொண்டு துணைச் செயலா் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியா்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது தொடா்பாக மத்திய ஊழியா்கள் நலத் துறை திங்கள்கிழமை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.