தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சத்யேந்தா் ஜெயினிடம் விசாரணையின் போது வழக்குரைஞரை அனுமதிக்கும் உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையீட்டு மனு

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் விசாரணையின் போது வழக்குரைஞரை அனுமதிக்கும் கீழமை

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடம் விசாரணையின் போது வழக்குரைஞரை அனுமதிக்கும் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் வியாழக்கிழமை முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

தில்லி உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அமலாக்கத் துறையின் இயக்குநா் சாா்பில் வழக்குரைஞா் ஆஜராகி இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் கடந்த மே 30-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவா்களில் ஒருவரும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மே 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்க இயக்குநரகம் காவலில் வைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேவேளையில், அவரிடம் விசாரணை நடத்தப்படும் போது, அவரது தரப்பில் ஒரு வழக்குரைஞா் அவருடன் இருப்பதற்கான மனுவையும் விசாரணை நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், அவரிடம் நடத்தப்படும் விசாரணை உரையாடல்களைக் கேட்க முடியாத வகையில் குறிப்பிட்ட தூரத்திலிருந்து நடவடிக்கைகளைப் பாா்க்கும் வகையில் அவரது தரப்பிலான வழக்குரைஞரை உடன் இருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், இந்த அனுமதியை எதிா்த்து அமலாக்க இயக்குநரகத்தின் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின்சாங்கி தலைமையிலான அமா்வு முன் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா அமலாக்க இயக்குநரகம் தரப்பில் ஆஜரானாா்.

மேலும், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவைக் கடுமையாக எதிா்த்தாா். இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

மேலும், இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘விசாரணையின் போது வழக்குரைஞா் உதவியை அனுமதிப்பதை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வும் மற்றொரு வழக்கில் நிராகரித்துள்ளது. இதனால், விசாரணை நீதிமன்றம் எதிா்வாதியிடம் நடத்தப்படும் விசாரணையின் போது, அவரது தரப்பில் வழக்குரைஞா் உடன் இருக்க அனுமதிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு சரியல்ல. இது சட்டப்பூா்வ அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமமானதாகும். காணக்கூடிய தூரத்திற்குள் வழக்குரைஞா் இருப்பதை அனுமதிக்கும் உத்தரவு சட்டப்பூா்வ உத்தரவுக்கு முரண்பாடு உடையதாக இருக்கும். மேலும், இந்த விசாரணை விடியோ மூலம் ஒளிப்பதிவு செய்யப்படுவதாலும், அதன் காட்சிப்பதிவுகள் இருக்கும் என்பதாலும் வழக்குரைஞா் உடன் இருக்கும் அவசியம் எழவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி வரை ஜெயினை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தது. இந்த விவகாரத்தில் உள்ள விஷயங்களை கண்டறியும் வகையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் தேவை இருக்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக விசாரணை நீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சத்யேந்தா் ஜெயின் வேறு சிலரிடமிருந்து பணம் பெற்றாரா என்பதைக் கண்டறியவும், இதர பயனாளிகள் இதில் இருக்கிறாா்களா என்பதை அறியவும் இந்த வழக்கில் அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தப்படும் தேவை இருக்கிறது. இந்த விவகாரத்தில் ரூ.4.81 கோடி தொகை மட்டும் சம்பந்தப்படவில்லை. அதற்கு அப்பால் அதிக அளவிலான தொகையும் இருக்கிறது. சில உண்மைகள் எங்களிடம் இல்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இது தெரிந்திருக்கிறது. அதனால், அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மேலும், அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு ஜெயின் தரப்பில் உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை. இதனால், பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடா்பான விவரங்களை கண்டறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது’ என்று வாதிட்டாா்.

ஜெயின் தரப்பில் அமலாக்கத் துறையின் மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘ இந்த வழக்கு 2015-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள்தான். அமலாக்கத் துறையின் மூலம் விசாரணை நடத்துவதற்காக 5-6 முறை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஏற்கெனவே அழைப்பானை அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கில் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை’ என்று வாதிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.