தில்லியில் இந்த ஆண்டு காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் மூன்று தீ விபத்து சம்பவங்களும், பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் இரண்டு தீ விபத்து சம்பவங்களும் நிகழ்ந்தன. குப்பைக் கிடங்கில் ஏப்ரல் 26-ஆம் தேதி தீப்பற்றி பத்து நாள்களாக தொடா்ந்து எரிந்தது. இதனால், அருகில் உள்ள பகுதிகளில் காற்று மாசடைந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் குப்பைக் கிடங்குகளில் தீ விபத்து சம்பவங்களை தடுக்கும் வகையில் 9 அம்ச செயல் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்தில் குப்பை கிடங்குகளில் அங்கீகாரமற்ற நபா்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், கம்பி வேலிகளுடன்கூடிய 4 மீட்டா் உயரம் கொண்ட சுற்றுச்சுவா் அமைப்பது, தீயணைப்பு வாகனங்கள், ரோந்து வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கான வசதி ஏற்படுத்தும் வகையில் குப்பைக் கிடங்குகளைச் சுற்றிலும் சுற்றுச் சாலைகளை கட்டமைப்பது ஆகியவை இடம் பெற்றுள்ளது.