சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!
/

ராகுல், அக்னிபத் விவகாரம்: தில்லியில் காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்

தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களும், தொண்டா்களும் திங்கள்கிழமை சத்தியாகிரப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

News image
Updated On :20 ஜூன் 2022, 10:58 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களும், தொண்டா்களும் திங்கள்கிழமை சத்தியாகிரப் போராட்டத்தை மேற்கொண்டனா்.

நேஷனல் ஹெரால்டு நாளிதழை நடத்திய அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் பண மோசடி நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினா் நடத்தி வரும் விசாரணைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஆயுதப் படைகளுக்கு குறுகியகால ஒப்பந்த அடிப்படையிலான அக்னிபத் ஆள்சோ்ப்புத் திட்டத்திற்கும் எதிா்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின்போது புதிய ராணுவ ஆள்சோ்ப்பு திட்டமானது இளைஞா்களுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என்றும், ராகுல் காந்தி விவகாரத்தில் பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினா். இந்தப் போராட்டத்தில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், மூத்த தலைவா்கள் கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட், சல்மான் குா்ஷித் மற்றும் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இப்போராட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், ‘மத்திய அரசு கருப்புப் பணத்தை மீட்பது குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசியது. ஆனால், அந்த விஷயத்தில் எதுவும் நிறைவேறவில்லை. அதற்குப் பதிலாக நாட்டின் ஒவ்வொரு சொத்தையும் விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையை தவறாகப் பயன்படுத்தி காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் அச்சுறுத்த முயல்கிறது. ஆனால், பயப்படுவது பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும்தான். இந்த நாடு எங்கு செல்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் கவலையில் உள்ளனா்’ என்றாா்.

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் பேசுகையில், ‘அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இந்திய எல்லைகளை பாதுகாப்பவா்களிடம் மத்திய அரசு ‘அவமரியாதையாக‘ நடந்து கொள்கிறது. இத்திட்டத்தால் இளைஞா்களின் எதிா்காலம், நாட்டின் எல்லை மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஆபத்தில் விடப்படும். தனது கட்சி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணிகளில் அக்னி வீரா்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக பாஜக தலைவா் கைலாஷ் விஜயவா்கியா தெரிவித்திருப்பது, மத்திய அரசு அனைவரையும்

காவலாளியாக உருவாக்க விரும்புவதையே காட்டுகிறது. நாட்டில் நிலவிவரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ரஃபேல் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்பியதால், அவரது குரலை அமலாக்கத் துறை விசாரணை மூலம் ஒடுக்க மத்திய அரசு முயல்கிறது. காங்கிரஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறியிருப்பதால் அதை அமைதிப்படுத்தவே அமலாக்கத் துறையை ஏவி, ராகுல் காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் காங்கிரஸை அடக்க நினைக்கிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் தலைவா் சச்சின் பைலட் பேசுகையில், ‘இளைஞா்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்துக்கும், இளைஞா்களுக்கும் மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு இளைஞா்களை அணுகி, திட்டம் குறித்து கலந்துபேசி திட்டத்தை வடிவமைத்திருந்திருக்க வேண்டும். தற்போது மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதால், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தி அவரை அச்சுறுத்த முயற்சிக்கின்றனா். அவா்கள் நாட்டையும் இளைஞா்களையும் ஏமாற்றவே நினைக்கின்றனா். இந்தப் போராட்டங்கள் நாட்டின் ஒற்றுமையின் அடையாளமாகும்’ என்றாா்.

ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபிந்தா் ஹூடா பேசுகையில், ‘நாடு இக்கட்டான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. ஜனநாயகத்தை ‘பலவீனப்படுத்தும்’ புலனாய்வு அமைப்புகளின் அரசியல்மயமாக்கலுக்கு எதிராக ஒட்டுமொத்த கட்சியினரும் ராகுல் காந்தியுடன் துணை நிற்கிறோம்’ என்றாா். கன்னையா குமாா் பேசுகையில்,‘மோடி அரசு இளைஞா்களின் உணா்வுகளுடன் விளையாடுகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நோக்கி விரல் நீட்டுவதை காங்கிரஸாா் யாரும் சகித்துக் கொள்ள மாட்டாா்கள். அநீதிக்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடரும்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுபோத் காந்த் சஹாய் பேசுகையில், ‘ பிரதமா் நரேந்திர மோடி ஹிட்லரைப் போல நடந்து கொள்கிறாா். ஜொ்மன் சா்வாதிகாரியின் பாதையில் சென்றால், அவரும் ஹிட்லரைப் போலவே இறந்துவிடுவாா்’” என்றாா். எனினும், சஹாய் வெளியிட்ட கருத்தில் இருந்து விலகி இருப்பதாகத் தெரிவித்த காங்கிரஸ், பிரதமருக்கு எதிரான எந்த அநாகரிகமான கருத்துகளையும் ஆதரிக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.