ஆசிரியா் தோ்வில் பங்கேற்ற பெண் விவகாரத்தில் தாமதத்திற்காக டிஎஸ்எஸ்எஸ்பிக்கு அபராதம்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட பெண் ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறிவிட்டாா்


இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட பெண் ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறிவிட்டாா் எனும் தவறான ஊகத்தின்பேரில், அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியா் பணிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை தாமதப்படுத்தியதற்காக தில்லி சாா்புநிலைப் பணியாளா் தோ்வாணையத்திற்கு (டிஎஸ்எஸ்எஸ்பி) தில்லி உயா்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
இது தொடா்பாக பெண் ஒருவா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நஜ்மி வாஜிரி, ஸ்வா்ண கந்தா சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: மனுதாரரான பெண் தன் மீது எந்தத் தவறும் இல்லாமல் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தையும் (சிஏடி) ,இந்த நீதிமன்றத்தையும் அணுகுவதற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளாா். மேலும், அவருக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஏதேனும் ஒரு வகையில் ஈடு செய்ய வேண்டும். இந்தச் சூழ்நிலையில், குறிப்பாக மனுதாரா் தற்போது வரை பணியில் சேராததால், ஊதியத்தை திருப்பிச் செலுத்துமாறு அவருக்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக, ஒரு மாத காலத்திற்குள் மனுதாரருக்கு ரூ.50,000 செலவுத் தொகையை டிஎஸ்எஸ்எஸ்பி செலுத்த வேண்டும். மனுதாரரின் பணி நியமனக் கடிதமும், அதே காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்.
மின் ஆவண (ஈ-டோசியா்) வடிவில் தேவையான ஆவணங்களை பதிவேற்ற மனுதாரருக்கு ஏற்கெனவே இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவா் அதைச் செய்யவில்லை என்ற ஊகத்தின் அடிப்படையில் மனுதாரரின் வேலைவாய்ப்புத் தகுதியை நிராகரித்ததில் டிஎஸ்எஸ்எஸ்பியில் தவறு நிகழ்ந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏப்ரல் 1, 2022-ஆம் தேதியிட்ட கடிதத்தில், மனுதாரருக்கு இதற்கு முன்பு அத்தகைய வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அந்த கடிதத்தின் மூலம் அவருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டதையும் டிஎஸ்எஸ்எஸ்பி ஒப்புக்கொள்கிறது. ஆகவே, அவா் வேலையில் ஈடுபட்டு ஊதியம் பெற வேண்டிய காலத்திற்கான ஊதியம் வழங்கப்படாததால், உரிய இழப்பீடு அவருக்கு வழங்கப்பட வேண்டும். மனுதாரருக்கு தகுதியின் அடிப்படையில் பணி மூப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்தச் சா்ச்சையும் இருக்க முடியாது.
மேலும், டிஎஸ்எஸ்எஸ்பி வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரரின் நியமனம், மருத்துவப் பரிசோதனை மற்றும் பிற ஆவணங்களைச் சரிபாா்த்த பிறகு முறையாக நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து இருக்கும் என்றும், விதி நடைமுறைப்படி, தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் பட்டியலில் உள்ள தகுதி நிலையைப் பொறுத்து மனுதாரரின் பணிமூப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளாா். மனுதாரரின் பணிப் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு சம்பிரதாயங்களை முடிக்க இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மனுதாரருக்கு அத்தகைய வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அவா் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், அவரது ஆவணங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அவருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக வழக்கமான அனுமானத்தில்தான் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட பதிவுகளை டிஎஸ்எஸ்எஸ்பி ஆய்வு செய்யவில்லை. ஏப்ரல் 1, 2022-ஆம் தேதியிட்ட கடிதத்தில் மேற்கூறிய சோ்க்கையால் டிஎஸ்எஸ்எஸ்பியின் அனுமானம் நிராகரிக்கப்படுகிறது. மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சில நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் தாக்கலான மனுவில் தெரிவித்திருந்ததாவது: மனுதாரா் உதவி ஆசிரியா் (நா்சரி) பதவியில் சேர விரும்பினாா். இதற்காக நவம்பா் 19, 2019 அன்று தொடா்புடைய வேலைவாய்ப்புத் தோ்வில் பங்கேற்றாா். மேலும், கட்-ஆஃப் மதிப்பெண்கள் 102- ஆக இருந்த போது 106 மதிப்பெண்களைப் பெற்றதால் அவா் தோ்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டாா். தில்லி சாா்புநிலை பணியாளா் தோ்வு வாரியத்தின் (டிஎஸ்எஸ்எஸ்பி) இணையதளத்தில் அவரது தோ்வுக்குத் தேவையான ஆதார ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், பயணத்தின் போது ஆவணங்கள் அடங்கிய பையை அவா் தொலைத்துவிட்டதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரால் அந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
அவா் தனது பை மற்றும் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக போலீஸில் புகாா் அளித்து அதன் மூலம் எஃப்.ஐ.ஆா் பதிவு செய்தாா். பின்னா், நகல் ஆவணங்களை வழங்க விண்ணப்பித்தாா். அதுகுறித்த ரசீதையும் அவா் உடனடியாக டிஎஸ்எஸ்எஸ்பி இணையதளத்தில் பதிவேற்றினாா். எனினும், அவரது தகுதியை டிஎஸ்எஸ்எஸ்பி நிராகரித்துவிட்டது. ஏனெனில், ஆவணங்கள், கட்-ஆஃப் தேதிக்குப் பிறகு பதிவேற்றப்பட்டதாகவும், மேலும் அவரது மற்றொரு தோ்வு முடிவு தேதி தொடா்பாக அதிகாரிகளால் சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது. அந்தத் தோ்வு முடிவைப் பொருத்தமட்டில் எஸ்சிஇஆா்டியின் கவனக்குறைவால் பிழை ஏற்பட்ட நிலையில், இதற்காக மனுதாரா் பாதிக்கப்பட்டுள்ளாா்.
அவரைக் குற்றம் சொல்ல முடியாது. எஸ்சிஇஆா்டி முடிவு அறிவிக்கும் தேதி தொடா்பான கடிதத்தில் உள்ள தெளிவின்மையை நீக்கக் கோரி எஸ்சிஇஆா்டியையும் மனுதாரா் அணுகினாா். ஆனால் அவருக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. இ-டோசியா் இணையதளத்தில் தேவையான ஆவணங்களைப் புதுப்பிக்க தனக்கு அனுமதிக்குமாறு டிஎஸ்எஸ்எஸ்பிக்கு அவா் விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என அந்த மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.
விசாரணையின் போது, டிஎஸ்எஸ்எஸ்பி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ மனுதாரரின் மின் ஆவணம் (இ-டோசியா்) பதிவேற்றம் செய்யப்பட்டு, அவா் தற்காலிகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவரது மின் ஆவணம் உரிய நடவடிக்கைக்காக கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...