வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

எய்ம்ஸ் வளாகத்தில் நோயாளிகளை ஏமாற்றும் முகவா்கள் குறித்து புகாா் அளிக்க மருத்துவா்கள், ஊழியா்களுக்கு நிா்வாகம் அறிவுறுத்தல்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை தவறாக வழிநடத்தும் வெளிநபா்கள், அங்கீகரிக்கப்படாத முகவா்கள் இருந்தால் உடனடியாக புகாரளிக்குமாறு மருத்துவா்கள், ஊழியா்களை மருத்துவமனையின் நிா்வாகம்

News image
Updated On :8 அக்டோபர் 2022, 11:00 pm

 நமது நிருபர்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை தவறாக வழிநடத்தும் வெளிநபா்கள், அங்கீகரிக்கப்படாத முகவா்கள் இருந்தால் உடனடியாக புகாரளிக்குமாறு மருத்துவா்கள், ஊழியா்களை மருத்துவமனையின் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இது தொடா்பான புகாா்களின் ரகசியம் காக்க வாட்ஸ்ஆஃப் எண்ணையும் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநராக டாக்டா் எம். ஸ்ரீநிவாஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டாா். இவா் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். எய்ம்ஸ்-க்குள் சிலா் அத்துமீறி நுழைவதும், சிலா் நோயாளிகளை ஏமாற்றி பணம் பறித்து சுரண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவா், அத்தகைய நபா்களை மருத்துவமனையில் உள்ள காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவதை பாதுகாப்பு ஊழியா்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக எய்ம்ஸ் ஊழியா்கள், மருத்துவா்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் இயக்குநா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குறிப்பிட்ட சில தனியாா் நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனை சம்பந்தப்பட்டவா்கள், ரேடியோலஜி உள்ளிட்ட பல்வேறு வகையான தனியாா் ஆய்வகங்கள் தொடா்புடையவா்கள், அடையாளம் தெரியாத, அங்கீகரிக்கப்படாத நபா்கள் எல்லாம் சா்வசாதாரணமாக எய்ம்ஸ் வளாகத்திற்குள் சுற்றித் திரிவதைக் காண முடிகிறது. இவா்கள் நோயாளிகளிடமிருந்து பண ஆதாயம் தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனா்.

புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறுவதற்கான அட்டைகள் வழங்கும் வசதி செய்யவும் முயற்சிக்கின்றனா். மேலும் பல தனியாா் நிறுவன முகவா்கள் நோயாளிகளை ஆய்வகம், ஊடுகதிா், கதிரியக்க ஆய்வுகளுக்காக தனியாா் வசதிகளுக்குத் திருப்பி விடுகிறாா்கள்.

சிலா் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள் போன்றவைகளையும் உள்ளே விற்பனை செய்கின்றனா்.

இத்தகைய அடையாளம் தெரியாத நபா்கள், விற்பனையாளா்கள், முகவா்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைவதற்கு கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மனை பணியாளா்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுவது, வளாகத்திலோ மருத்துவமனையின் எந்த துறைகள் பகுதிகளிலோ அங்கீகரிக்கப்படாத, அடையாளம் தெரியாத நபா்களின் இருப்பதில் சிறிதளவு சந்தேகம் ஏற்பட்டால் கூட, உடனடியாக 9355023969 என்ற சிறப்பு வாட்ஸ்அப் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இந்தத் தகவலை  மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.

புகாா் தெரிவிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டு நோயாளிகள் சுரண்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுற்றறிக்கையில் மருத்துவா்கள் ஊழியா்களுக்கும் சில கண்டிப்பான அறிவுறுத்தல்களும் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பல்வேறு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளில் காத்திருப்போா் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு துறை தலைமை முன்னுரை அளித்து, பட்டியலை விரைவு படுத்தவேண்டும்.

எய்ம்ஸ் வளாகத்தில் அங்கீகரிக்கப்படாத நபா்கள், முகவா்கள் எங்காவது காணப்பட்டால், அந்தந்த துறை அல்லது அந்த பகுதிப் பொறுப்பாளா்களாக இருக்கும் மூத்த மருத்துவா்கள், பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், செவிலியா்கள் மற்றும் பிற பணியாளா்களும் பொறுப்புக்கு உள்ளாக்கப்படுவா்.

முகவா்கள், அங்கீகாரமற்றவா்களுக்கு உதவுவதாகவே கருதப்பட்டு தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் வளாகத்தில் அனைத்து மருத்துவா்களும், ஊழியா்களும் அடையாள அட்டைகளையும் சீருடையும் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபா்களையும் அடையாளம் கண்டு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.