தில்லியில் பல மாவட்டங்களில் முகக் கவச விதிமீறலுக்கு அபராதம் விதிப்பது நிறுத்தம்: அதிகாரிகள் தகவல்
பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதை தில்லியில் பல மாவட்ட அதிகாரிகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டனா்.


பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதை தில்லியில் பல மாவட்ட அதிகாரிகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டனா். மேலும், முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அலுவல்பூா்வ உத்தரவு ரத்து இன்னும் வெளியிடப்படாத நிலையில், அமலாக்க நடவடிக்கையை சில அதிகாரிகள் தளா்த்தியுள்ளனா் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கடந்த மாதம் நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டத்தில், செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு முகக் கவசம் அணிவதை நிறுத்த முடிவு செய்ததை அடுத்து இந்த நடைமுறை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தக் கூட்டத்தில், 1897-ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் விதிகளை அரசு செயல்படுத்தியுள்ளதாகவும் இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாததற்கு ரூ.500 அபராதம் விதித்து பிறப்பித்துள்ள உத்தரவு செப்டம்பா் 30-ஆம் தேதி முடிவடைவதாகவும் டிடிஎம்ஏவிடம் தலைமைச் செயலா் தெரிவித்திருந்தாா். இதன்படி, முகக் கவசம் கட்டாயமாக்கும் உத்தரவு முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருளாகிறது. அது நீட்டிக்கப்படுமா (உத்தரவின் மூலம்) என்பது குறித்த ஒரு தெளிவு மட்டுமே பெற வேண்டியுள்ளது’ என்றாா்.
மற்றொரு வருவாய்த் துறை அதிகாரி கூறுகையில், ‘முகக் கவசம் கட்டாயம் என்பதை நீக்குவதற்கான உத்தரவு சுகாதாரத் துறையால் வெளியிடப்படும். இதற்கான கோப்பு நடவடிக்கையில் உள்ளது. சில மாவட்டங்களில் அபராதம் வழங்கப்பட்டாலும், பல மாவட்டங்கள் அந்த நடவடிக்கையை நிறுத்திவிட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்துகின்றன’ என்றாா்.
தென்மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முகக் கவசம் அணியாமல் இருப்பதற்கான அபராத நோட்டீஸ் வழங்குவதும் குறைந்துள்ளது. மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் அபராத நோட்டீஸ் நடவடிக்கை பின்பற்றப்படுகிறது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில்தான் அளிக்கப்படுகிறது. பிற பகுதிகளில், அபராத நோட்டீஸ் வழங்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணா்த்துகின்றனா். சில மாவட்டங்கள் அமலாக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டன’ என்றாா்.
மேற்கு மாவட்ட அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாங்கள் இப்போது சலான்களை வழங்கவில்லை. எப்படியும், நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போது அமலாக்கம் கடுமையாக்கப்படுகிறது. ஆனால், எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாலும், தொற்று கடுமையாக இல்லாததாலும் விதிமுறைகள் தளா்த்தப்படுகின்றன’ என்றாா். மத்திய மாவட்டத்தைச் சோ்ந்த அதிகாரி கூறுகையில்,‘அமலாக்கக் குழுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. நெரிசலான இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியவும், கரோனா நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது’ என்றாா்.
செப்டம்பா் 22-ஆம் தேதி நடைபெற்ற டிடிஎம்ஏ கூட்டத்தின் போது, முகக் கவச உத்தரவை திரும்பப் பெறுவதற்கான முடிவு ஒருமனதாக இருந்ததும், பல வேறுபாடுகள் இருந்ததும் கூட்டத்தின் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது. தில்லி தலைமைச் செயலாளா் நரேஷ் குமாா் இக்கூட்டத்தில், ‘தற்போதைய நிலைமை வசதியாக உள்ளதாகவும், ஆனால், நோய்த் தொற்று உருமாற்றங்கள் தொடா்ந்து வருவதால் பாதுகாப்பை குறைக்க முடியாது’ என்று கூறியுள்ளாா்.
செப்டம்பா் 26 முதல் டிசம்பா் 31 வரை பல பண்டிகைகள் மற்றும் நாடு முழுவதும் வெகுஜனக் கூட்டங்கள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் முன்னரே அறிவுறுத்தியிருந்தது. இக்கூட்டத்தில் நீத்தி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வி.கே.பால் கூறுகையில், ‘வைரஸ் இன்னும் உயிா்ப்புடன் இருப்பதால், அதன் பிவுகள் மற்றும் உருமாற்றங்கள் அவ்வப்போது வெளித் தோன்றுவதால் கண்காணிப்பு இன்னும் தேவை’ என்று வலியுறுத்தினாா்.
பொதுமக்கள் இதன் பொறுப்புகள் மற்றும் கரோனா நடத்தை விதிகள் குறித்து நன்கு அறிந்திருப்பதால், ‘சுய ஒழுக்க முறை‘யை தற்போது முயற்சிக்கலாம் என்றும் இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளா் பரிந்துரைத்திருந்தாா். முகக் கவச உத்தரவைஅமல்படுத்துவதில் ‘நடைமுறை சிக்கல்கள்’ இருப்பதாக கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் மீண்டும் வலியுறுத்தினாா். மேலும், விதியை தளா்த்த வேண்டியதன் அவசியத்தையும் அவா் எடுத்துரைத்தாா்.
துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா மற்றும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொற்றுநோய்ச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு செப்டம்பா் 30-க்கு பிறகு நீட்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று சுருக்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்ட ரூ.500 அபராத உத்தரவு செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு திரும்பப் பெறப்படும் என்றும் டிடிஎம்ஏ ஒப்புக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...