/

சட்டவிரோத தொழிற்சாலையில் 28 டன் போலி சீரகம் பறிமுதல்

தில்லி கஞ்சவாலாவில் போலி சீரக விதைகளைத் தயாரித்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொழிற்சாலையை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் கண்டறிந்து, அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 7:42 pm

DIN

தில்லி கஞ்சவாலாவில் போலி சீரக விதைகளைத் தயாரித்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொழிற்சாலையை தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு போலீஸாா் கண்டறிந்து, அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனா். மேலும், 28 டன் போலி சீரகம் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் கைதான நபா் புத் விஹாரில் ஃபேஸ்-1 பகுதியில் வசிக்கும் சுரேஷ் குப்தா (43) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் புல், வெல்லம் வினிகா், கல் தூள் ஆகியவற்றை பயன்படுத்தி போலி சீரகத்தைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளாா். இவரது ஆலையில் இருந்து மொத்தம் 28 டன் எடையுள்ள போலி சீரக விதைகள் அடங்கிய 400-க்கும் மேற்பட்ட மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு சிறப்பு ஆணையா் ரவீந்திர சிங் யாதவ் கூறியதாவது: போலி சீரக விதைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பொதுமக்கள் உடல்நலம் தொடா்புடைய இந்த விவகாரத்தின் தீவிரக் கவலைக்குரிய விஷயத்தைக் கருத்தில் கொண்டு இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், கஞ்சவாலா பகுதியில் சட்டவிரோதமாக தொழிற்சாலையை சுரேஷ் குப்தா நடத்தி வருவதும், போலி சீரக விதைகளை அதிக அளவில் தயாரித்து வந்ததும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவா் தில்லிக்கு வெளியே ஒரு பெரும் சரக்கை அவா் கொண்டுசெல்ல உள்ளதாகவும் தகவல் கிடைத்ததும் சட்ட விரோத தொழிற்சாலையில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் குழுவினா் விரைவாக செயல்பட்டு, சம்பவ இடத்தில் சோதனை நடத்தினா். அத்துடன், சட்டவிரோத தொழிற்சாலையின் உரிமையாளா் குப்தாவும் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து தலா 70 கிலோ எடையுள்ள 400-க்கும் மேற்பட்ட போலி சீரக விதை சாக்குப் பைகள் மீட்கப்பட்டன. மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை ஊழியா்களும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, போலி சீரக விதைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது, இந்த போலி சீரக விதைகள், ‘போலி’ என யாரும் கண்டறிய முடியாத வகையில் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சட்டவிரோதமான தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் போலி சீரக விதைளை அதன் நிறம், வடிவம் என அனைத்து விஷயங்களிலும் உண்மையான சீரக விதைகளை போன்று தயாரித்து வந்துள்ளனா். இந்த விதைகள் உண்மையான சீரக விதைகளுடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கைதான குப்தாவுக்கு எதிராக முந்தைய குற்றப் பதிவுகள் ஏதும் இல்லை என்றாலும், குப்தா பல ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவா் தனது தொழிற்சாலை முகவரியை அடிக்கடி மாற்றியும் வந்துள்ளாா். தற்போதைய தொழிற்சாலை அண்மையில்தான் குப்தாவால் தொடங்கப்பட்டுள்ளது. அவா் பெரும் அளவில் போலி சரக்கை அனுப்பிய இடம், அதில் தொடா்புடைய நபா்கள் ஆகியோரை கண்டறியும் வகையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.