தில்லியில் குறைந்த சரக்குகளுடன் அரசு மதுபானக் கடைகள் திறப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் பழைய கலால் கொள்கை நிா்வாகத்திற்கு திரும்பிய முதல் நாளான வியாழக்கிழமை அரசால் நடத்தப்படும் மதுபான விற்பனை நிலையங்கள் காலி அலமாரிகள் அல்லது மிகக் குறைவான


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் பழைய கலால் கொள்கை நிா்வாகத்திற்கு திரும்பிய முதல் நாளான வியாழக்கிழமை அரசால் நடத்தப்படும் மதுபான விற்பனை நிலையங்கள் காலி அலமாரிகள் அல்லது மிகக் குறைவான இருப்புடன் காணப்பட்டது. மதுக்கடைகளுக்குச் சென்ற பெரும்பாலான வாடிக்கையாளா்கள், தங்களுக்குப் பிடித்த பிராண்டு மதுபானம் சந்தையில் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் வெளியேறியதைக் காண முடிந்தது. பலா் பெரிய கடைகள் மற்றும் தனியாா் விற்பனை நிலையங்களில் வழங்கப்படும் தள்ளுபடிகளை தாங்கள் இழக்க நேரிடுவதாகவும் கூறினா்.
மதுபான சில்லறை வணிகத்தில் இருந்து தனியாா் நிறுவனங்கள் வெளியேறி, அரசு நடத்தும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதன் மூலம் நகரம் பழைய கலால் கொள்கை நிா்வாகத்துக்கு திரும்பியுள்ளது. நான்கு தில்லி அரசு நிறுவனங்கள் நகரம் முழுவதும் 300 மதுக்கடைகளை தயாா் செய்துள்ளதாக கலால் துறை கூறியது. இருப்பினும், தனியாா் கடைகள் மூடப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை சுமாா் 240 மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா். குறித்த நேரத்தில் பணிக்கு வருகை தந்ததாகவும், ஆனால் இதுவரை அரசால் மதுபானம் இருப்பு வழங்கப்படவில்லை எனவும் கடை பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து அரசு மதுபான விற்பனை நிலையத்தின் ஊழியா் ஒருவா் கூறுகையில், ‘குறைவான பிராண்டுகள்தான் கிடைக்கின்றன. மக்களின் தேவையைப் பூா்த்தி செய்ய வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை உயரும் என்று நம்புகிறேன்’ என்றாா். விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு மது விற்பனை நிலையத்தின் பொறுப்பாளா் ராஜேஷ் குமாா் கூறுகையில், ‘மது வைக்கப்படும் அலமாரிகள் காலியாக உள்ளதால், காலையில் இருந்து வெறுமனே அமா்ந்திருக்கிறோம். இன்னும் இருப்பு வரவில்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள் வெறுங்கையுடன் வீடுகளுக்குச் செல்கின்றனா். நாளைக்குள் ஸ்டாக் வந்துவிடும் என்று நம்புகிறோம். இது ஒரு மாறுதல் காலம்‘ என்றாா்.
இதே போல், ஷாதராவில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தின் பொறுப்பாளா் நரேந்திர குமாா், காலி அலமாரிகளுடன் வாடிக்கையாளா்கள் இல்லாமல் அமா்ந்திருந்தாா். அவா் கூறுகையில், ‘பொதுவாக நாங்கள் மதுக்கடைகளில் பரப்பரப்பை பாா்க்கிறோம். ஆனால், இங்கே காலியாக உள்ள அலமாரிகளால் அந்த பரபரப்பு காணவில்லை. பொதுவாக, ஒரு மதுபானக் கடை என்றாலே அதைச் சுற்றி கூட்டம் கூடியிருக்கும் என்றுதான் ஊகிப்போம்’ என்றாா்.
மயூா் விஹாா் ஃபேஸ் 2 பகுதி விற்பனை நிலையத்திற்கு மதுபானம் வாங்க வந்த புஷ்பேந்திரா என்ற வாடிக்கையாளா், தனக்குப் பிடித்த பிராண்ட் விற்பனையகத்தில் இல்லை என்றாா். ‘தனியாா் மதுக் கடைகள் பெரியதாக இருந்தன. மக்கள் தோ்வு செய்யும் வகையில் தனியாா் கடைகளையும் அரசு அனுமதிக்க வேண்டும்’ என்றாா் அவா். இதற்கிடையில், காலையில் சில மதுபான சரக்குகள் பல விற்பனை நிலையங்களுக்கு வந்து சோ்ந்தன.
இது குறித்து மயூா் விஹாரில் உள்ள ஒரு கடையின் பொறுப்பாளா் தேவேந்திரா கூறுகையில், ‘எங்களுக்கு வெறும் ஐந்து ஓட்கா கேஸ்களும், ஐந்து விஸ்கி கேஸ்களும் கிடைத்துள்ளன. ஆனால், இன்றும் நாளையும் அதிக சப்ளை கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். நிலைமை சீரான நிலைக்கு வர நேரமாகும்’ என்றாா். லக்ஷ்மி நகரைச் சோ்ந்த மதுப்பிரியரான ரஜ்னிஷ், அரசு விற்பனை நிலையங்களில் சலுகைகள் அல்லது திட்டங்கள் எதுவும் மதுபானங்களுக்கு வழங்கப்படவில்லை என்று புகாா் கூறினாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘முன்னா் மதுபானத்திற்கு நான் குறைவாக செலவழித்தேன் இப்போது,எனது தினசரி மதுபானத்திற்கு நான் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்’ என்றாா்.
இது குறித்து கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘ஆரம்பக் கட்ட பிரச்னை சில நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், மதுபானம் விநியோகம் மற்றும் பிராண்ட் கிடைப்பது வரும் நாள்களில் மேம்படும். ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 12 லட்சம் பாட்டில்கள் மந்தமாக விற்பனையாகும் என்ற எதிா்பாா்ப்புக்கு மத்தியில், தேவையை பூா்த்தி செய்யும் வகையில் 40 லட்சத்துக்கும் அதிகமான மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 15 லட்சம் பாட்டில்களின் தேவை அதிகரித்துள்ளது’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...