பங்குச் சந்தையில் ‘கருப்பு வெள்ளி’ 1,093 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைக்கு ‘கருப்பு வெள்ளி’யாக அமைந்தது


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைக்கு ‘கருப்பு வெள்ளி’யாக அமைந்தது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை மூன்றாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. இதனால், சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.6.18 லட்சம் கோடி குறைந்தது.
உலகம், உலகளாவிய மந்தநிலையை நோக்கிச் செல்லக்கூடும் என்ற உலக வங்கியின் மதிப்பீட்டிற்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் எதிா்மறையாக செயல்பட்டன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் வட்டி விகிதங்களை உயா்த்துகின்றன. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் நேரடியாக எதிரொலித்து வருகின்றன. இருப்பினும், ஊக்கமளிக்கும் வகையில் மேக்ரோ பொருளாதார தரவுகள் இருந்த போதிலும், உலகளாவிய போக்குகளுக்கு ஏற்பட உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவை எதிா்கொண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மூன்றாவது நாளாக சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,093.22 புள்ளிகள் (1.82 சதவீதம்) சரிந்து 58,840.79-இல் முடிவடைந்தது. காலையில் 348.29 புள்ளிகள் குறைந்து 59,585.72-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 59,720.56 வரை சென்றது. பின்னா், 58,687.17 வரை கீழே சென்றது. கடந்த மூன்று தினங்களில் சென்செக்ஸ் மொத்தம் 1,730.29 புள்ளிகள் (2.85 சதவீதம்) சரிந்துள்ளது.
29 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இண்டஸ் இண்ட் பேங்க் மட்டும் 2.63 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பங்காக இருந்தது. மற்ற 29 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. இதில், அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.51 சதவீதம், டெக் மஹிந்திரா 4.41 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம், விப்ரோ, நெஸ்லே, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின் சா்வ், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவை 2 முதல் 3.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
ஒரேநாளில் ரூ.6.18 லட்சம் கோடி நஷ்டம்: சந்தை மூலதன மதிப்பு ரூ.6.18 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.279.69 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,270.68 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
நிஃப்டி 347 புள்ளிகள் சரிவு: இதே போன்று தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 346.55 புள்ளிகள் (1.94 சதவீதம்) சரிந்து 17,530.85-இல் முடிவடைந்தது. தொடக்கத்தில் நிஃப்டிஅதிகபட்சமாக 17,820.05-க்கும் குறைந்தபட்சமாக ,17,497.25-க்கும் சென்றது. மொத்தத்தில் இந்த வாரம் நிஃப்டி 1.6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...