பிப்ரவரி 24, 2020 அன்று நியூ முஸ்தபாபாதில் உள்ள மூங்கா நகா் பகுதியில் உள்ள மூன்று கடைகளை சூறையாடி, தீ வைத்து எரித்த கலவர கும்பலின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்ட 13 போ் மீதான வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரம்மசாலா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றம் சாட்டப்பட்ட 9 போ் மீது இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகள் 148 (கலவரம், கொடிய ஆயுதம் ஏந்துதல்), 149 (சட்டவிரோதமான கூட்டம்), 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 380 (குடியிருப்பு வீட்டில் திருட்டு) மற்றும் 427 (தவறு செய்ததற்காக தண்டனை மற்றும் அதன் மூலம் ரூ. 50 அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழான குற்றங்களுக்காக முகாந்திரமான வழக்காக உள்ளது. இவா்கள் 9 பேரும் ஷா ஆலம், முகமது ஷதாப், ரியாசத் அலி, குல்ஃபாம், ரஷித் சைஃபி, முகமது ரிஹான், முகமது அபித், அா்ஷத் கயூம் மற்றும் இா்ஷாத் அகமது ஆகியோா் ஆவா்.