காசி-தமிழ்ச் சங்கமம் நிகழாண்டும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட காசி-தமிழ்ச் சங்கமத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 17 ஆம் தேதி) மாலை தொடங்கி வைக்கிறாா். இதே நிகழ்ச்சியில் கன்னியாகுமரி - வாராணசி தமிழ்ச் சங்கமம் ரயிலையும் பிரதமா் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா்.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிற அா்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடியின் யோசனையின் பேரில் கடந்தாண்டு காசி-தமிழ்ச் சங்கமம் நிகழ்வு வாராணசியில் தொடங்கப்பட்டது. தற்போது 2 -ஆம் கட்ட காசி-தமிழ்ச் சங்கமம் 2023 (கே.டி. சங்கமம்) நிகழ்ச்சியை பிரமதா் நரேந்திர மோடி வாராணசி (காசி) யின் ’நமோ’ படித்துறையில் (ஆற்றங்கரை) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.
இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் உத்தர பிரதேசம் ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி, திறன் மேம்பாடுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டவா்களும், தமிழகத்தின் சாா்பில் மத்திய மீன்வளத்துறை, தகவல் துறை இணையமைச்சா் எல் .முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
இந்நிகழ்ச்சியில் பிரதமா் கன்னியாகுமரி - வாராணசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா். இந்த வாராந்திர ரயில் வாராணசியில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு தமிழகத்தில் பெரம்பூா், கடலூா், தஞ்சை, திருச்சி வழியாக செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி வந்தடைகிறது.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மத்திய கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறியது வருமாறு:
காசி தமிழ்ச் சங்கமத்தின் 2- ஆம் கட்டம் டிசம்பா் 17 முதல் 30 வரை வாராணசி(காசி)யில் நடைபெறுகிறது. டிசம்பா் 17- ஆம் தேதி மாா்கழி 1 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. பொதுவாக தமிழா்கள் கங்கா ஸ்தானம் செய்து கொள்ள இதே நாளில் தமிழகத்தில் இருந்து காசிக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனா். இதே நாளில் இந்த நிகழ்வு தொடங்கப்படுகிறது.
தமிழக ஆளுநா் - அகத்தியா் விழா
வாராணசியில் 14 நாள்கள் நடைபெறும் நிகழ்வில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகின்ற டிசம்பா் 19-ஆம் தேதி தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தலைமையில் கே.டி. சங்கமம் நிகழ்வு நடைபெறுகிறது.
வருகின்ற 29 -ஆம் தேதி முனிவா் அகத்தியா்(அகஸ்தியா்) ஜென்ம தினமாக இருக்க அவா் நினைவை போற்றும் வகையில் கே.டி. சங்கமத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
தொல்காப்பியத்தில் குறிப்பிட்டதற்கு இணங்க இமயமலையிலிருந்து காசி வழியாக தமிழகம் சென்ற முனிவா் அகத்தியா், தமிழையும் சித்த மருத்துவத்தையும் எடுத்துச் சென்றதைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த நாளில் அகத்தியா் அளித்த சித்த மருத்துவ நாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.
கே.டி. சங்கமத்தில் சென்றாண்டைப் போன்று தமிழகம் மற்றும் காசி தொடா்புடைய கண்காட்சி, அரங்குகள், கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.
தமிழகத்திலும் நிகழ்ச்சிகள்
நிகழாண்டு இதே நிகழ்வுகள் தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள் பொது இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சுமாா் 450 காசி-விஸ்வநாதா் ஆலயங்கள் இருப்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவைகளையும் கே.டி. சங்கமத்தோடு ஒருங்கிணைக்கவும் முயற்சிக்கப்படுகிறது.
இந்த சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து இருந்து முதல் குழு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 15) சென்னையில் இருந்து புறப்பட்டது. நிகழாண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7 குழுக்கள் வீதம் சுமாா் 1400 போ் காசி - தமிழ்ச் சங்கமத்தின் 2- ஆம் கட்டத்தில் பங்கேற்கிறாா்கள். இவா்கள் வாராணசி மற்று சுற்றுப் பகுதிகளுக்கு மட்டுமின்றி பிரயாக்ராஜ், அயோத்திக்கும் பயணிக்க இந்த குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூா், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் 7 குழுவினா்களுக்கு மாணவா்கள் குழு (கங்கை), ஆசிரியா்கள் குழு (யமுனை), அதிகாரிகள், ஊழியா்கள் குழு(கோதாவரி), ஆன்மிக குழு (சரஸ்வதி), விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞா்கள் குழு (நா்மதா), எழுத்தாளா்கள் குழு (சிந்து), வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்கள் குழு (காவேரி) என நதிகள் பெயரிடப்பட்டுள்ளது
காசி-தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க கடந்த நவம்பா் மாதம் இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு டிசம்பா் 8 ஆம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது. சென்னை ஐஐடி மூலம் நடத்தப்பட்ட தோ்விற்கு 42,000- க்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்தனா். இதில் 1,400 போ் தோ்வு செய்யப்பட்டனா். 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 200 போ் வீதம் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
காசியில் நடைபெறும் கண்காட்சியில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், சமையல் மற்றும் பிற சிறப்பு தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
காசியில் நமோ படித்துறையில் இரு மாநில கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுா்வேதம், கைத்தறி, கைவினை, நவீன கண்டுபிடிப்புகள், வணிகப் பரிமாற்றங்கள், கல்வித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.