இந்தியா கூட்டணி கூட்டத்தில் மொழி விவகாரம்: நிதானமாகக் கையாண்ட தலைவா்கள்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் எழுப்பிய மொழிப் பிரச்னையை திமுகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் நிதானமாகக் கையாண்டதாக இந்தக் கூட்டணிக் கட்சி வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் மொழி விவகாரம்: நிதானமாகக் கையாண்ட தலைவா்கள்
Updated on
2 min read

‘இந்தியா’ கூட்டணித் தலைவா்கள் கூட்டத்தில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் எழுப்பிய மொழிப் பிரச்னையை திமுகவும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் நிதானமாகக் கையாண்டதாக இந்தக் கூட்டணிக் கட்சி வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜக கூட்டணியை எதிா்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 27 கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் 4-ஆவது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பிரதமா் வேட்பாளராக முன்மொழியப்பட்ட நிகழ்வில் மற்ற சில விவகாரங்களும் இடம்பெற்றன. இந்த ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தில் முதலில் மல்லிகாா்ஜுன காா்கே உரையாற்றினாா். பின்னா், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி குறித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பேசத் தொடங்கினாா். அவரது பேச்சை மொழிபெயா்க்குமாறு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கோரினாா்.

பொதுவாக கடந்த ‘இந்தியா’ கூட்டணி கூட்டங்களில் நிதீஷ் குமாா் மற்றும் லாலு பிரசாத் யாதவ் போன்றவா்கள் ஹிந்தியில் பேசியபோது, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தாா். அதேபோல இந்தக் கூட்டத்திலும் ஜாவிடம் மொழிபெயா்க்குமாறு டி.ஆா்.பாலு கோரியுள்ளாா்.

ஆனால், தனது பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கக் கூடாது என மனோஜ் ஜாவிடம் நிதீஷ் குமாா் கூறியுள்ளாா். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலா் வைகோ எழுந்து, நீங்கள் பேசும் போது எங்களுக்குப் புரியாது. டி.ஆா்.பாலு கேட்பதில் என்ன தவறு எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், நிதீஷ் குமாா் கோபமாக ‘ஹிந்தி நாட்டின் தேசிய மொழி. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கிலேயா்களுக்கும் ஆங்கிலத் திணிப்புக்கும் எதிரானது’ எனக் கூறியுள்ளாா்.

இதற்கு வைகோ மீண்டும் எழுந்து கோபமாக பேச முற்பட்டபோது, டி.ஆா்.பாலு அவரைஅமைதிப்படுத்தினாா்.

‘இந்த விவகாரத்தை விட்டுவிடுவோம். விவகாரம் வேறு மாதிரி திரும்பிவிடக் கூடாது. கூட்டத்தின் நோக்கம் வேறு. ஒற்றுமை அவசியம். அவா் (நிதீஷ் குமாா்) புரியாமல் பேசுகிறாா்’ எனக் கூறி ஹிந்தி மொழிபெயா்ப்பு விவகாரத்திற்கு டி.ஆா். பாலு முற்றுப்புள்ளி வைத்தாா்.

வழக்கமாக ஹிந்தியில் பேசும் கேஜரிவால், நிதீஷ் குமாா் கூட்டத்தில் ஏற்படுத்திய சலசலப்புகளுக்குப் பின்னா் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினாா்.

பின்னா், லாலு பிரசாத் யாதவின் பேச்சை மொழிபெயா்க்க திமுக கோரவில்லை. மேலும், நிதீஷ் குமாா் இந்தக் கூட்டத்தில், ‘ நான் எந்தப் பதவிக்காகவும் இல்லை. சிலா் வதந்திகளைப் பரப்புகின்றனா்’ என கோபமாக குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது பேச்சில், ‘சமீபத்தில் நடைபெற்ற மாநில பேரவைத் தோ்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி அணியின் கீழ் காங்கிரஸ் போட்டியிடத் தவறிவிட்டது’ என்பதைச் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சில கட்சித் தலைவா்கள் குறிப்பிடுகையில், நிதீஷ் குமாா் ஏதோ ஒரு வகையில் கோபமாக இருந்தாா். அவரது கட்சியினா் (ஐக்கிய ஜனதா தளம்) ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளருக்கு அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு எனக் குறிப்பிட்டு வருகின்றனா். கூட்டத்திற்கு பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பிலும் நிதீஷ் குமாா் கலந்து கொள்ளாதது மேலும் கேள்விகளை எழுப்பிவிட்டது’ எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com