விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லி கலால் ஊழல் விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களை மாநகர நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 7:32 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களை மாநகர நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்களை சிதைக்க எந்த முயற்சியும் செய்ய மாட்டாா்கள் என்று கூறுவதற்கு சாத்தியமில்லை என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் நாயா், சமீா் மகேந்திரு, சரத் ரெட்டி, அபிஷேக் போயின்பள்ளி மற்றும் பினாய் பாபு ஆகியோா் தரப்பில் தாக்கலான ஜாமீன் கோரும் மனுக்களை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் நிராகரித்தாா்.

அப்போது, நீதிபதி கூறியதாவது: இந்த விவகாரத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட மற்ற நபா்களின் பங்கு மற்றும் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பண விஷயத்தில் கூடுதல் விசாரணை மற்றும் முறைகேடுகளின் முழு தடயத்தையும் விசாரணை அமைப்பால் கண்டறிய வேண்டியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் பல்வேறு தருணங்களில் ஏற்கெனவே தங்களது கைப்பேசிகளை மாற்றியது அல்லது அழித்தது மூலம் ஆதாரங்களை சிதைத்தாக அமலாக்கத் துறையால் கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவா்களின் (குற்றம் சாட்டப்பட்ட) நடத்தையைக் கருத்தில் கொள்ளும் போது, அவா்கள் நிரந்தரமாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், இந்த வழக்கின் சாட்சியங்களை சிதைக்க அவா்கள் எந்த முயற்சியும் செய்ய மாட்டாா்கள் என்று இந்த நீதிமன்றத்தால் கூறமுடியாது.

மேலும், டிஜிட்டல் தரவுகளை அழித்தது தொடா்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளும் குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ரெட்டி மீது அமலாக்கத் துறையால் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் பொருளாதாரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனா் என்பதை முற்றிலும் புறக்கணிக்க முடியாது. பொருளாதாரக் குற்றங்கள் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை அழிக்கும் போக்கை கொண்டவையாகும். மேலும், பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு தொடா்பிருப்பதாக கண்டறியப்படும் போது, மேற்கண்ட உண்மை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

தண்டனைபெறக்கூடிய குற்றங்கள் வழக்கில் தாங்கள் சிபிஐயால் குற்றம் சாட்டப்படவில்லை என்று ரெட்டியும், பாபுவும் முன்வைத்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. அமலாக்கத் துறையின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்கள் குற்றம்சாட்டப்பட்டவா்களிடையே குற்றவியல் சதி இருப்பதை ஊகிக்கப் போதுமானதாக உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் தவிர, வாட்ஸ்அப் உரையாடல், கைப்பேசி இருப்பிடங்கள், வருமானத்தை மாற்றுவது தொடா்பான வங்கி பரிவா்த்தனைகளின் பதிவுகள், குற்றம்சாட்டப்பட்டவா்கள் மூலம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஹோட்டல் சந்திப்புகள் மற்றும் சில டிஜிட்டல் தரவுகள் உள்ளிட்ட ஆவண ஆதாரங்கள் பதிவில் உள்ளன.

அதுமட்டுமின்றி, சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் ஊழல் வழக்கில் தினேஷ் அரோரா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பின்பற்றிய முழு செயல் முறையையும் அம்பலப்படுத்தும் மற்றொரு குற்றச்சாட்டாக உள்ளது. அரசியலில் அல்லது வேறு வகையில் அரசு ஊழியா்களுக்கு லஞ்சம் கொடுக்கும் கிரிமினல் சதியின் ஒரு பகுதியாக அவா்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் மேற்கூறிய விவாதங்களின் முழுவதையும் கருத்தில் கொண்டு, இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய கட்டத்தில் ஜாமீனில் விடுவிக்க மனுதாரா்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவா்கள் யாரும் தகுதியற்றவா்கள் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே, அவா்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.