பொதுச்சந்தையில் 2-ஆவது முறையாக கோதுமை ஏலம்: விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு தனது இருப்பில் இருந்த கோதுமையை 2-ஆவது முறையாக மின்னணு முறையில் ஏலம் விட்டது.


கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு தனது இருப்பில் இருந்த கோதுமையை 2-ஆவது முறையாக மின்னணு முறையில் ஏலம் விட்டது. பொதுச்சந்தை விற்பனையை முன்னிட்டு, கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.5 குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏலத்தில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மொத்தம் 3.85 லட்சம் மெ.டன் கோதுமையை ரூ. 901 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரம் மற்றும் உணவு பொதுவிநியோகத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியது வருமாறு: கடந்த ஆண்டு உற்பத்திக் குறைவால், பொதுச்சந்தையில் கோதுமை விலை சற்று அதிகரித்து வந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய உணவுக் கழகத்திடம் இருப்பில் இருந்த 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில் 25 லட்சம் மெ.டன்னை வெளிச் சந்தையில் விற்க மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், 2 லட்சம் மெ.டன் மாநில அரசுகளுக்கும், 3 லட்சம் மெ.டன் கோதுமையை பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், கேந்திரிய பந்தா், என்சிசிஎஃப், என்ஏஎஃப்டி போன்ற கூட்டமைப்புகளுக்கும் ஏலம் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுச்சந்தையில் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில், முதல் மின்னணு ஏலத்தில் 9.2 லட்சம் மெ.டன் கோதுமை 23 மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக 15.25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற இ- ஏலத்தில் இந்திய உணவுக் கழகத்தால் 3.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ரூ.901 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் 1,060-க்கும் அதிகமான ஏலதாரா்கள் பங்கேற்றனா். இந்த ஏலத்தில் சிறு, நடுத்தர அரவை மில் உரிமையாளா்களும், வா்த்தகா்களும் அதிகமானோா் பங்கேற்றனா். இதில் 5 ஏலதாரா்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 3,000 மெ.டன் ஏலம் எடுத்தனா். ஒரு குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.2,338.01 என்ற விகிதத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாட்டில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகளில் கோதுமை விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 5 குறைந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது என்று மத்திய உணவுத் துறைச் செயலாளா் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தாா். பொது நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் கோதுமை விலை கிலோ ரூ. 21.50-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவு கிலோ ரூ. 27.50-க்கு மிகாமல் விற்பனை செய்யவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலையைக் கட்டுப்படுத்த அமைச்சா்கள் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்த இ-ஏலமுறையில் கோதுமை விற்கப்படுகிறது. மீதமுள்ள கோதுமையை நாடு முழுவதும் வரும் மாா்ச் 2-ஆவது வாரம் வரை வாரந்தோறும் ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.
கடந்த 2021-22 சாகுபடி பருவத்தில் நாட்டில் கோதுமை உற்பத்தி 106.84 மில்லியன் டன்னாக குறைந்தது. இது முந்தைய ஆண்டில் 109.59 மில்லியன் டன்னாக இருந்தது. இதனால், கோதுமை கொள்முதல் 43 மில்லியன் டன்னிலிருந்து கடந்த ஆண்டு 19 மில்லியன் டன்னாக குறைந்தது. இருப்பினும், கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் 156.96 லட்சம் டன் கோதுமை இருந்தது. கோதுமை புதிய கொள்முதல் வரும் மாா்ச் 15 முதல் தொடங்க உள்ளது. இருப்பினும், வரும் ஏப்ரல் 1- தேதி அன்று 96 லட்சம் டன் கோதுமை மத்திய அரசின் இருப்பில் உறுதியாக இருக்கும். அதேசமயம், தேவை 75 லட்சம் டன்தான் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...