/

தில்லியில் புதிய பாதுகாப்புத் திட்டத்திற்காக 2,140 மரக்கன்றுகள் புதிதாக நடப்படும்: மாநகர அரசு அறிவிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் புதிய பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்ட உள்ள கட்டுமான இடத்தில் அகற்றப்படும் 214 மரங்களுக்குப் பதிலாக 2,140 புதிய மரங்கள் நடப்படும் என்று மாநகர அரசு சனிக்கிழமை அறிவித்துள்

News image
Updated On :2 ஜூலை 2023, 1:10 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் புதிய பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்ட உள்ள கட்டுமான இடத்தில் அகற்றப்படும் 214 மரங்களுக்குப் பதிலாக 2,140 புதிய மரங்கள் நடப்படும் என்று மாநகர அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தலையீட்டிற்குப் பிறகு தில்லியில் புதிய பாதுகாப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டம் அமையவுள்ள கட்டுமான இடத்தில் 214 மரங்களை அகற்றி, இடமாற்றம் செய்யப்படவுள்ளன.

எனவே அதற்குப் பதிலாக, 2,140 புதிய மரக்கன்றுகளை நடவு செய்யும் விண்ணப்பதாரா் நிறுவனத்தின் நிபந்தனை முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் திட்டப்பணிகள் தொடங்கவிருப்பதை முதல்வா் கேஜரிவால் தெளிவுபடுத்தியுள்ளாா். விண்ணப்பதாரா் நிறுவனம் தில்லியில் ஒரு புதிய பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், சில மரங்கள் அந்த கட்டுமானத் தளத்தில் இடையூறாக இருந்தன. எனவே, அங்குள்ள 214 மரங்களை அகற்றி, இடமாற்றம் செய்ய அனுமதி கோரி, தில்லி அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு அந்நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது.

தேசிய நலன் கருதியும், பாதுகாப்புப் படைகளுக்கான நவீன உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாா்.

நவீன முன்னேற்றங்கள் தில்லியில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்யும் வகையில், பாதிக்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 10 மடங்கு அதிக இழப்பீட்டை அரசு கட்டாயமாக்குகிறது.

அதேவேளையில், அரசால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மரங்களைத் தவிர, பாதுகாப்பு திட்டம் அமையவுள்ள இடத்தில் உள்ள ஒரு மரத்தையும் சேதப்படுத்த வேண்டாம் என்று தில்லி அரசு விண்ணப்பதாரா் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மரங்களைத் தவிர வேறு ஏதேனும் மரங்கள் சேதமடைந்தால், அது தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் 1994ன் கீழ் குற்றமாகும்.

தில்லி அரசு மேலும் விண்ணப்பதாரா் நிறுவனத்திடம், மரங்களை அகற்றுவதற்கும் மாற்றுவதற்கும் பதிலாக பத்து மடங்கு மரங்களை நடுவதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால், தற்போது 2,140 மரக்கன்றுகளை புதிதாக நடவுள்ளனா். மரங்களை இடமாற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்புகளில் இந்த புதிய மரக்கன்றுகள் நடப்படும்.

தில்லி அரசின் வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பதாரா் நிறுவனம் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மரங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கும். தில்லி அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவின்படி, மரங்களை அகற்றி நடுவதற்குப் பதிலாக, தில்லியின் மண் மற்றும் காலநிலைக்கு ஏற்ற பல்வேறு வகையான மரங்கள் நடப்படும். இதில் வேம்பு, அமல்டாஸ், பிபால், பில்கான், குலாா், பா்கட், தேசி கிகா் மற்றும் அா்ஜுன் ஆகியவை அடங்கும்.

இந்த மரங்கள் வனம் அல்லாத நிலங்களில் 6-8 அடி உயரமுள்ள மரக்கன்றுகளாக நடப்படும். மேலும், இடமாற்றம் செய்யப்பட வேண்டிய மரங்களைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரா் நிறுவனத்திற்கு தேவையான நிபந்தனைகளை பூா்த்தி செய்த பின்னா் உடனடியாக செயல்முறையை தொடங்கி 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவா்கள் மேற்பாா்வைக்காக மர அலுவலரிடம் இது பற்றிய அறிக்கையை சமா்ப்பிப்பாா்கள்.

அத்துடன், எந்த மரத்திலாவது பறவைகள் கூடு இருப்பது கண்டறியப்பட்டால், பறவைகள் மரத்தை கைவிடும் வரை அதை வெட்டவோ அல்லது நடவு செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டாது.

மரங்கள் வெட்டப்பட்ட 90 நாள்களுக்குள், மரங்களின் கிளைகள் இலவசமாக அருகில் உள்ள சுடுகாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.