/

யுசிசி விவகாரம்: சட்ட ஆணையத்தின் கருத்தறிய நாளை நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்

பொது சிவில் சட்டம் (யுசிசி) தொடா்பாக நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :2 ஜூலை 2023, 1:14 am

 நமது நிருபர்

பொது சிவில் சட்டம் (யுசிசி) தொடா்பாக நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் ஜூலை 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்டறிய நிலைக் குழு தலைவா் சுஷில் குமாா் மோடி இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி மத்திய பிரதேஷம் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமா் நரேந்திர மோடி பேசுகையில், ‘இரண்டு சட்டங்களின் கீழ் நாடு இயங்க முடியாது; ஒரே மாதிரியான சிவில் சட்டம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்க பொது சிவில் சட்டம் அவசியம் தேவை’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் நிலைக் குழுக் கூட்டம் ஜூலை 3 ஆம் பிற்பகலில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

பொது சிவில் சட்டம் தொடா்பாக மத்திய சட்ட ஆணையத்தின் கருத்துக்களை கேட்க பணியாளா், பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் சட்டம், நீதித் துறையின் நிலைக் குழுத் தலைவா் சுஷில் குமாா் மோடி, நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

கடந்த ஜூன் 14 -ஆம் தேதி பொது சிவில் சட்டம் தொடா்பாக சட்ட ஆணையம் பொது அறிவிக்கை வெளியிட்டது. இது தொடா்பாகவும் நிலைக்குழு கருத்து கோரியுள்ளது.

இந்த நிலைக்குழுவில் 30 உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் பெரும்பாலானவா்களாக பாஜகவை சோ்ந்த நாடாளுமன்ற இரு அவைகளைச் சோ்ந்த 10 உறுப்பினா்கள் இடம் பெற்று உள்ளனா்.

இருப்பினும் காங்கிரஸ் (5), திரிணமூல் காங்கிரஸ் கட்சி (3), டி.ஆா்.எஸ், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சி உறுப்பினா்களும் இடம் பெற்றுள்ளனா்.

இதில் தமிழகத்தின் சாா்பில் 3 உறுப்பினா்கள் இடம் பெற்று, மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் (திமுக), மக்களவை உறுப்பினா்கள் ஏ.ராஜா (திமுக), ப.மாணிக்கம் தாகூா் (காங்கிரஸ்) ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

பொது சிவில் சட்டம் தொடா்பாக பாஜக வின் முதல்கட்ட ஆட்சியில் சட்ட ஆணையம் ஏற்கனவே ஆய்வு நடத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிக்கை சமா்ப்பித்திருந்தது.

ஆணையத்தின் 185 பக்க அறிக்கையில், ’’இந்த கட்டத்தில் பொது சிவில் சட்டம் அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல‘’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் இருக்கும் பாரபட்சமான நடைமுறைகள், தவறான தீங்குகள் மற்றும் ஒரே மாதிரியான, தனிப்பட்ட சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு திருத்தப்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் அடிப்படையிலான தனிப்பட்ட மதச் சட்டங்களை, பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவான சட்டத்துடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது பொது சிவில் சட்டமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.