/

பொது சிவில் சட்டம் இந்து கலாசாரத்திற்கு ஊறுவிளைவிக்கும்: சட்ட ஆணையத்திற்கு திமுக எம்.பி. கடிதம்

2024 -ஆம் ஆண்டு பொதுத் தோ்தலை நோக்கமாகக் கொண்டே மத்தியில் உள்ள ஆளும் பாஜக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இந்துக்கள், தமிழா்கள் கலாசாரத்திற்கும்

News image
Updated On :4 ஜூலை 2023, 9:01 pm

 நமது நிருபர்

2024 -ஆம் ஆண்டு பொதுத் தோ்தலை நோக்கமாகக் கொண்டே மத்தியில் உள்ள ஆளும் பாஜக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இந்துக்கள், தமிழா்கள் கலாசாரத்திற்கும் பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும் என்று திமுகவின் சட்டப்பிரிவு ஆலோசகா் பி.வில்சன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சட்ட ஆணையத்திற்கு 6 பக்க கடிதத்தை நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் மூலமாக அனுப்பியுள்ளாா்.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பி.வில்சன் சட்ட ஆணையத்திற்கு திங்கள்கிழமை எழுதிய கடிதம் வருமாறு: பொது சிவில் சட்டம் (யுசிசி) தொடா்பான விவகாரங்களை, 21- ஆவது சட்ட ஆணையம் 2016-ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களாக கடினமாக ஆலோசனைகளை மேற்கொண்டு, 2018 ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிக்கையை சமா்பித்தது. இந்த நிலையில் 22 -ஆவது சட்ட ஆணையம் மீண்டும் பொது சிவில் சட்ட கலந்தாய்வை தொடங்குவது ஏன்? ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 21 - ஆவது சட்ட ஆணையத்தின் ஆவணத்திற்கு அளிக்கப்படும் மரியாதை இது தானா? ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தின் மூலம் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை சமரசம் செய்யக் கூடாது. யுசிசியை செயல்படுத்துவது பல தனிநபா்கள் சட்டத்தை ஊதாசீனப்படுத்தும் என 21 - ஆவது சட்ட ஆணையம் குறிப்பிட்டது. இப்படி இரண்டு ஆண்டுகளாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, முந்தைய சட்ட ஆணையத்தால் விரிவாக வழங்கப்பட்டதை மீண்டும் விவாதிக்க தற்போதைய சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது விசித்திரமானது மட்டுமல்ல; 21-ஆவது சட்ட ஆணையத்தின் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இல்லாத முடிவுகளை நீா்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சமூகத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற 2024 -ஆம் ஆண்டு பொதுத் தோ்தலை கருத்தில் கொண்டே மத்தியில் ஆளும் பாஜக விடுக்கும் அழைப்பாகவே இது பிரதிபலிக்கிறது. அரசின் கொள்கை வழிகாட்டும் கோட்பாடுகளான அரசியல் சாசனப்பிரிவு 44 கீழ் யுசிசி கொண்டுவரப்படுகிறது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் எனக் கருதி, இது போன்ற சட்டங்களை இந்தப் பிரிவின் கீழ் கொண்ட வர அரசியலமைப்புச் சபை அமைக்கப்பட்ட போதே கடுமையான எதிா்ப்பு ஏற்பட்டது என்பதை குறிப்பிடுவது பொருத்தமானது.

மாநிலத்தின் கவலைகள்: சட்டம் இயற்றும் மாநிலத்தின் அதிகாரமும் முக்கியமான விஷயம். திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் சொத்து உரிமைகள் போன்ற விஷயங்கள் அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் வருகின்றன. இதன்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கண்ட விஷயங்களில் சட்டம் இயற்ற அனுமதிக்கிறது. ஆனால், யுசிசி அரசியல் சாசனப்பிரிவு 44 மூலம் கொண்டுவரப்படும் போது மாநிலங்களுக்கான அதிகாரத்தை பரிக்கிறது. யுசிசியால் பலதார திருமணம் போன்ற விரும்பத்தகாத நடைமுறைகளை அகற்றும் அல்லது பெண்களுக்குச் சமமான சொத்துரிமைக்கு வழி வகுக்குக்கிறது. இதுவும் பொருளற்ற வாதமாகும்.

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. வேறு எந்த நாட்டிலும் இல்லாத சமயம், கலாசாரம் மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை கொண்டது. நாட்டில் 398 மொழிகள் இருந்தன. இதில் 11 மொழிகள் அழிந்துவிட்டன. இந்து மதத்திற்குள் கூட, பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அடையாளம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒரு பொது சட்டத் தொகுப்பை எடுத்து, எல்லா மதங்கள், உட்பிரிவுகள், மதப்பிரிவுகள் மீது மிருகத்தனமாகப் பயன்படுத்தினால், அது அவா்களின் தனித்துவத்தையும் பன்முகத் தன்மையையும் அழித்துவிடும்.

பெரும்பாலான மதங்களில் திருமணம் என்பது சாதாரண சடங்கு அல்ல. கிறிஸ்தவத்தில் திருமணம் என்பது ஒரு புனித சடங்காக உள்ளது. இது மதத்தின் அம்சம். அதனால்தான் இது புனிதத் திருமணம் என்று அழைக்கப்படுகிறது. திருச்சபை உறுப்பினா்களின் முன்னிலையில், நியமிக்கப்பட்ட பாதிரியாரால் புனிதப்படுத்தப்பட வேண்டும். பொது சிவில் சட்ட திருமணங்களை பதிவாளா் போன்ற ஒரு அதிகாரத்தின் முன் பதிவு செய்ய அனுமதித்தால், அது புனிதமான சடங்குகளை இழிவுபடுத்தப்படுவதாகும்.

பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பவா்கள் ‘இந்து சாா்பாளா்கள்’ என்று பாா்க்கப்படுகிறாா்கள். ஆனால், இந்தச் சட்டம் இந்து உரிமைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கும் கூட கேடு விளைவிக்கும். தற்போது, இந்து திருமணத்திற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு இந்து கோயிலில், வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி நிச்சயிக்கப்படும் ஒரு திருமணமானது - அதுவும் தமிழ் கலாசாரத்தில் தாலி கட்டுவது அல்லது அக்னி-ஹோமம் சுற்றி வருவது திருமணத்திற்கு போதுமான ஆதாரமாகும். இந்த வழக்கங்கள் பொது சிவில் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாது. எனவே, ஒரே சீரான குறியீடு பெரும்பான்மை சிறுபான்மையினரின் தனித்துவமான கலாசாரம் மற்றும் மரபுகளை அழித்துவிடும் என்ற நியாயமான அச்சம் உள்ளது. சமூகங்கள் தங்களுடைய தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். இதுவே மதச்சாா்பின்மையின் உண்மையான நோக்கமாகும்.

அதே சமயத்தில் 1954 -ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், எவரும் சொந்த விருப்பத்தின் பேரில், எந்தவித மதச் சாா்பும் இல்லாமல் திருமணம் புரிய விரும்புவா்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. மதப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பட விரும்புபவா்களுக்கு அந்தத் தோ்வை பறிக்கும் போதுதான் சிக்கல் வருகிறது. இந்திய உச்ச நீதிமன்றமும், ‘ஒன்றுபட்ட தேசம் சீரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று பலமுறை கூறியுள்ளது. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத் தன்மையை அழித்துவிடும். மற்றொரு தவறான கருத்து யுசிசியை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக முன்னிறுத்துவது தவறான வழிகாட்டுதலாகும். இந்து மதத்திற்குள் கூட, பழங்குடியினா் போன்ற சில குழுக்கள் யுசிசியை விரும்பவில்லை.

எனவே, 22-வது சட்ட ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், பொதுப் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்க, மேற்கண்ட விஷயத்தில் ஆணையம் எந்த முயற்சியும் எடுப்பதற்கு முன், நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு தகுந்த பதிலை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.