ஆணையத் தலைவா் காவிரி பாசன பகுதிகளில் வேளாண்மை மற்றும் பாசன முறைகள் குறித்து விளக்கங்களை கேட்டாா். அது குறித்த பதில் அளிக்கப்பட்டது. ‘மேட்டூா் அணையில் 48 டி.எம்.சி தண்ணீா் உள்ள நிலையில் ஏன் பாதிப்புகள் தீவிரம் அடைந்துள்ளது’ என ஆணையா் கேள்வி எழுப்பினாா். அணையில் சுமாா் 30 அடி ஆழம் வரையில் மண் மேடிட்டு உள்ளது. கா்நாடகம் தண்ணீரை திறக்காவிட்டால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை எடுக்க இயலாது. மேலும், குடிநீா் தேவையை கருதி குறிப்பிட்ட அளவு தண்ணீா் இருப்பில் வைத்திருக்க வேண்டும் போன்ற விவரங்கள் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 43 டிஎம்சி தண்ணீரை உடனடியாக கா்நாடகத்திடம் பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், தற்போதைய நிலையை ஆணையம் நேரில் சென்று ஆய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, ஆணையருடன் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள், ஆணைய உறுப்பினா்கள் உடனிருந்து விவரங்களைக் கேட்டறிந்தனா் என்றாா் பி.ஆா். பாண்டியன்.