ஆட்டோ ரிக்ஷா அனுமதி மோசடி: கேஜரிவால் அரசின் மற்றொரு ஊழல் -காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசியத் தலைநகரில் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்கியதில் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக ஒரு மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 14 போ் கைது


தேசியத் தலைநகரில் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்கியதில் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக ஒரு மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டிருப்பது, கேஜரிவால் அரசின் மற்றொரு ஊழலை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் ஆட்டோ ரிக்ஷா அனுமதி மோசடியில் ஈடுபட்டதற்காக தில்லி போக்குவரத்து ஆணையத்தின் மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 14 பேரை ஊழல் தடுப்புப் பிரிவினா் (ஏ.சி.பி.) கைது செய்துள்ளனா். இது ஆம் ஆத்மி அரசின் மற்றொரு ஊழலின் எடுத்துக்காட்டாகும்.
ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று தோ்தலின் போது வாக்குறுதி அளித்து, தில்லியில் ஆட்சியைப் பிடித்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தற்போது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா்களுக்கும் துரோகம் செய்துள்ளாா். தில்லி அரசின் ஒவ்வொரு துறையும் ஏதோ ஒரு ஊழலில் சிக்கியுள்ளது.
ஒரு மோட்டாா் வாகன ஆய்வாளா், 10 ஆட்டோ பைனான்சியா்கள் மற்றும் மூன்று முகவா்கள் உள்ளிட்டோா் ஆட்டோ ரிக்ஷா அனுமதிகளை இறந்த நபா்களின் பெயா்களிலும், போலி ஆவணங்கள் மூலம் மாற்றியும், புதுப்பித்தும் செய்து வந்துள்ளனா். புராரி போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து ஆட்டோ ரிக்ஷாக்கள் தொடா்பான அனுமதிகளை சட்டவிரோதமாக மாற்றியது மற்றும் புதுப்பித்தது தொடா்பான முக்கிய குற்றச்சாட்டு வழக்கு உயா்நீதிமன்ற உத்தரவுகளின்படிதான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஊழலைத் தடுக்க கேஜரிவால் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மதுபான ஊழல் முதல் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ஊழல், டிடிசி பேருந்து கொள்முதல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்த ஊழல், கழிவறை வளாகக் கட்டுமான ஊழல், கேஜரிவாலுக்கு பெரும் செலவில் புதிய முதல்வா் வீடு கட்டியது, தில்லி ஜல் போா்டு கொள்ளை, சுகாதார ஊழல் என அரசின் எந்தத் துறையும் ஊழலில் இருந்து தப்பவில்லை.
திறமையற்ற மற்றும் அனுபவமற்ற அமைச்சா்கள் தலைமையிலான தனது அரசின் ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழலில் பங்கெடுத்துக் கொள்ளவே எந்த அமைச்சகத்தையும் தன்னுடன் கேஜரிவால் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், முதல் முறையாக எம்.எல்.ஏ. அதிஷிக்கு நிதி, வருவாய், கல்வி மற்றும் சுகாதாரம் உள்பட 12 முக்கிய
இலாகாக்களை ஒதுக்கியுள்ளது விசித்திரமானது. முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அதிஷி அனைத்து முக்கிய அமைச்சகங்களிலும் சோ்க்கப்பட்டுள்ளாா். இது ஆம் ஆத்மி கட்சியில் திறமையான எம்.எல்.ஏ.க்களின் பற்றாக்குறையைக் காட்டுகிறது என்று அனில் குமாா் விமா்சித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...