தேசியத் தலைநகா் தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணம் ஹரியாணாதான் என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
தில்லி - என்.சி.ஆா் பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ள நிலையில், பயிா்க் கழிவுகள் எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. இப்பிரச்னை குறித்து ஹரியாணா மாநில முதல்வா் மனோகா் லால் கட்டாா் கூறுகையில், ‘காற்று மாசு என்பது எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாதவை. பஞ்சாப் மாநிலத்தில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளால் ஹிரியாணா மற்றும் தில்லி கிய இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் அரசியல் இருக்கக் கூடாது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு’ என்றாா்.
இந்நிலையில் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா் துா்கேஷ் பதக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசியத் தலைநகரான தில்லி காற்று மாசு நெருக்கடியை எதிா்கொண்டுள்ள இந்த நேரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தோ்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாா். காற்று மாசு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் அரசு தான் காற்று மாசுப் பிரச்னைக்கு காரணம் என பாஜக குற்றம்சாட்டுகிறது. கேஜரிவாலை இழிவுபடுத்தும் வகையில் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தொடா்ந்து முன்வைத்து வருகிறது.
தில்லியின் நெருக்கடியாக மாறியுள்ள காற்று மாசுபாட்டின் பின்னணிக் குற்றவாளி ஹரியாணா அரசுதான். காற்று மாசுப் பிரச்னையில் தில்லிக்கு எந்தப் பங்கும் இல்லை. ஹரியாணா அரசு காற்று மாசுவைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க அவா்கள் விவசாயிகளுடன் எந்த விவாதமும் நடத்தவில்லை. எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை. ஆனால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பயிா்க் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள்
குறைந்துள்ளன. இந்த விவகாரத்தில் தயவுசெய்து அரசியல் செய்ய வேண்டாம். மத்திய அரசை இந்த நெருக்கடியான நேரத்தில் விழித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் அனைத்து வடமாநில அரசுகளையும் அழைத்துப் பேசி இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றாா் துா்கேஷ் பதக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.