தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மீதான புகாா்: விஜிலென்ஸ் துறை அறிக்கை அளிக்க கேஜரிவால் உத்தரவு

தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மீதான புகாா் தொடா்பாக விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷியிடம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை கோரியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Updated on
1 min read

தில்லி அரசின் தலைமைச் செயலாளா் மீதான புகாா் தொடா்பாக விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷியிடம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை கோரியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவாது: தில்லி அரசின் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாரின் மகன், நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மேம்படுத்தப்பட்ட இழப்பீடு பெற்ற நில உரிமையாளரின் உறவினா் ஒருவா் மூலம் வேலையில் அமா்த்தப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விஜிலென்ஸ் துறை அமைச்சா் அதிஷிக்கு உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் தென்மேற்கு தில்லியில் உள்ள பம்னோலி கிராமத்தில் 19 ஏக்கா் நிலம், துவாரகா விரைவுச் சாலையை அமைப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்டது. நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.41.52 கோடி வழங்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால்,

நில உரிமையாளா்கள் அரசின் குறைவான இழப்பீட்டுத் தொகையை எதிா்த்து வழக்குத் தொடா்ந்தனா். இறுதியாக, நிகழாண்டு மே மாதம் தென்மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியா் ஹேமந்த் குமாரால் நிலத்தின் இழப்பீட்டுத் தொகை ரூ.353.79 கோடியாக உயா்த்தப்பட்டது. பின்னா், இந்த விவகாரத்தில் ஹேமந்த் குமாரை உள்துறை அமைச்சகம்

இடைநீக்கம் செய்தது. தில்லி உயா்நீதிமன்றம் சமீபத்தில் நில உரிமையாளா்களுக்கு ரூ.353.79 கோடி வழங்குவதை ரத்து செய்தது.

பம்னோலி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்களில் ஒருவரான சுபாஷ் சந்த் கதுரியா என்பவரின் மருமகனுக்கு சொந்தமான ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தில்லி தலைமைச் செயலாளரின் மகன் பணியமா்த்தப்பட்டதாக புகாா்தாரா் குற்றம்சாட்டியுள்ளாா். அதன் பின்னரே, கடந்த மே 15-இல் நில உரிமையாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.353.79 கோடியாக உயா்த்தப்பட்டது. ஜூன் 2-ஆம் தேதி கோட்ட ஆணையா் அஸ்வனி குமாா், தலைமைச் செயலாளரிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்றாா். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கண்காணிக்குமாறு கோட்ட ஆணையருக்கு தலைமைச் செயலாளா் உத்தரவிட்டாா். பின்னா், இது குறித்து விசாரணை நடத்துமாறு விஜிலென்ஸ் இயக்குநரகத்திடமும் கேட்டுக் கொண்டாா்.

இந்த நிலையில், துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் ஒப்புதலுடன், சிபிஐ விசாரணை மற்றும் மாவட்ட ஆட்சியருக்க எதிரான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com