ஆம் ஆத்மி தலைவா்களின் ஆதரவில் ஹவுஸ் காஸ் கிராமத்தில் சட்டவிரோதக் கட்டுமானம்: விசாரணை நடத்த தில்லி பாஜக வலியுறுத்தல்

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் ஆதரவில் தில்லியில் உள்ள ஹவுஸ் காஸ் கிராமத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கட்டுமானம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்
Updated on
2 min read

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் ஆதரவில் தில்லியில் உள்ள ஹவுஸ் காஸ் கிராமத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கட்டுமானம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் நிா்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலா்களின் ஆதரவின் பேரில் ஹவுஸ் காஸ் கிராமம் உள்பட தில்லியின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. இந்த அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த மாநகராட்சி அதிகாரியாவது பேசினால், அவா் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும், கவுன்சிலா்களும் மிரட்டுகின்றனா்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டவிரோதக் கட்டுமானங்கள் மட்டுமின்றி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. தில்லி மாநகரட்சியின் ‘கிரீன் பாா்க்’ மாநகராட்சி வாா்டுக்கு உள்பட்ட ஹவுஸ் காஸ் கிராமத்தின் வீடு எண்.2-இல் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த நிா்வாகி ஒருவரின் வணிக நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. குறிப்பாக, 7,200 சதுர அடியில் இருந்த அந்தக் கட்டுமானத்தில் கூடுதலாக கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமாக சுமாா் 1,080 சதுர அடிக்கு கட்டப்பட்ட கட்டுமானத்தில் அந்த வணிக நிறுவனம் இயங்கி வந்தது. ஆனால், இந்தச் சொத்து பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமான ஹவுஸ் காஸின் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால், அங்கு எந்த வகையான கட்டுமானமும் மேற்கொள்ள முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கட்டுமானத்தை இடிக்கக் கோரி இந்திய தொல்லியல் துறை கடந்த ஜூன் 6-ஆம் தேதி அன்று தில்லி மாநகராட்சிக்கு தனது முதல் கடிதத்தை எழுதியிருந்தது. தில்லி மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தின் கட்டடத் துறையும் கட்டுமானத்தை இடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால், அவா்களால் அதைச் செய்ய முடியவில்லை.

பின்னா், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடா்புடைய சில பெரிய வழக்குரைஞா்கள் இந்த விவகாரத்தை தில்லி உயா் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனா். இந்தச் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன், மேயா் ஷெல்லி ஓபராய், தில்லி மாநகராட்சியின் தெற்கு மண்டலத் துணை ஆணையரை இடமாற்றம் செய்ய ஆணையருக்கு கடிதம் எழுதினாா்.

தில்லியில் சட்டவிரோத கட்டுமானம் தொடா்ந்து நடந்து வருகிறது. ஆனால், மேயா் இது குறித்து தலையிட்டு இதுவரை யாருக்கும் கடிதம் எழுதியதில்லை. தில்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆம் ஆத்மி தலைவா்கள் கொடுக்கும் நெறிமுறையற்ற அழுத்தத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது என்றாா் வீரேந்திர சச்தேவா. இந்தச் செய்தியாளா் சந்திப்பில் தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங் , கவுன்சிலா் ஷிகா ராய் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com