அரை மணி நேரம் சட்டவிரோதத் தடுப்புக் காவல்: ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மாநகரக் காவல் துறையால் சட்டவிரோதமாக லாக்-அப் அறையில் சுமாா் அரை மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க போலீஸாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்
Updated on
2 min read

மாநகரக் காவல் துறையால் சட்டவிரோதமாக லாக்-அப் அறையில் சுமாா் அரை மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க போலீஸாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிகாரிகளின் திகைக்க வைக்கும் நடத்தை மூலம் குடிமக்கள் நடத்தப்படும் விதமானது கவலையடையச் செய்வதாக உள்ளதாகவும் நீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தில் ஒரு ‘அா்த்தமுள்ள செய்தியை’ அனுப்பும் வகையில், தவறு செய்த காவல் துறை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் என்று நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் உத்தரவிட்டாா்.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மனுதாரரின் சுதந்திரத்தை மதிக்காமல் அல்லது சட்டத்தின் தகுந்த நடைமுறையைப் பின்பற்றாமல், மனுதாரரை சம்பவ இடத்தில் இருந்து வெறுமனே அழைத்துச் சென்று காரணமின்றி லாக்-அப் அறைக்குள் வைத்ததன் மூலம் அதிகாரிகள் அடக்குமுறையுடன் நடந்து கொண்டுள்ளனா். மனுதாரா் லாக்-அப் அறையில் கழித்த நேரம் சிறிது நேரமாகவே இருந்தாலும்கூட, சட்டத்தால் நிறுவப்பட்ட முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் மனுதாரரின் சுதந்திரத்தைப் பறித்த காவல்துறை அதிகாரிகளை விடுவிக்க முடியாது.

காாவல்துறை அதிகாரிகள் தாங்களே சட்டமாக இருக்க முடியாது என்ற அா்த்தமுள்ள செய்தியை அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

இந்த வழக்கின் உண்மைகளில், மனுதாரரை சட்டவிரோதமாக காவலில் வைத்தது சுமாா் அரை மணி நேரம் மட்டுமே என்றாலும், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. இது எதிா்மனுதாரா்கள் (எண் 4 மற்றும் 5) ஊதியத்தில் இருந்து வசூலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

பெண் ஒருவருக்கும் காய்கறி விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான புகாரைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் உள்ளூா் காவல் துறையினரால் முறையாகக் கைது செய்யப்படாமல் சட்டவிரோதமாக லாக்-அப் அறையில் தாம் அடைக்கப்பட்டதாக மனுதாரா் குற்றம் சாட்டினாா். மேலும், தனது தனிப்பட்ட சுதந்திரத்தை மீறியதற்காக அவா் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியிருந்தாா்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மனுதாரருக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். இன்றி ஒரு இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு லாக்-அப் அறையில் வைக்கப்பட்டாா் என்பது மறுக்க முடியாதது. இது இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அவரது உரிமைக்கு எதிரானது. மனுதாரா் கைது செய்யப்படாததால் இந்த நீதிமன்றம் மிகவும் கவலையடைந்துள்ளது. அவா் அந்த இடத்திலிருந்து வெறுமனே அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு காரணம் ஏதுமின்றி லாக்-அப் அறைக்குள் வைக்கப்பட்டுள்ளாா். ஒரு குடிமகனின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை காற்றில் பறக்கவிட்டு காவல் துறை அதிகாரிகள் செயல்பட்டிருப்பது திகைக்கவைக்கிறது. சட்டத்திற்கு அப்பாற்பட்டவா்கள் போல நடந்து கொள்ளும் காவல்துறை அதிகாரிகளால் குடிமக்கள் நடத்தப்படும் விதத்தால் இந்த நீதிமன்றம் கவலை கொள்கிறது என்று அதில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com