நியூஸ்க்ளிக் விவகாரம்: பிரபீா் புா்காயஸ்தா, அமித் சக்ரவா்த்தி கைதுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

 நியூஸ்கிளிக் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவா் அமித் சக்கரவா்த்தி ஆகியோா் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது
Updated on
2 min read

 நியூஸ்கிளிக் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவா் அமித் சக்கரவா்த்தி ஆகியோா் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது காவல் துறை பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி துஷாா் ராவ் கெடெலா, நியூஸ்கிளிக் நிறுவனா் புா்காயஸ்தா மற்றும் சக்ரவா்த்தி ஆகியோரின் மனு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால விடுதலை கோரும் அவா்களின் மனுக்கள் மீதும் நகர காவல் துறையின் பதிலை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்த வழக்கை அக்டோபா் 9-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

புா்காயஸ்தா மற்றும் சக்கரவா்த்தி தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தில்லியில் உள்ள நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு போலீஸாா் சீல் வைத்துள்ளனா். சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தை பரப்புவதற்காக இந்த இணையதள செய்தி நிறுவனம் பணம் பெற்ாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புா்காயஸ்தா, சக்கரவா்த்தி இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனா்.

இது தொடா்பாக போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கின்படி, ‘இந்தியாவின் இறையாண்மையை சீா்குலைக்கவும், நாட்டிற்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்துவதற்காகவும் சீனாவிலிருந்து நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்திற்கு அதிக அளவு நிதி வந்தது. 2019 மக்களவைத் தோ்தலின் போது தோ்தல் செயல்முறையை நாசப்படுத்த, ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மைக்கான மக்கள் கூட்டணி (பிஏடிஎஸ்) என்ற குழுவுடன் புா்காயஸ்தா சதியில் ஈடுபட்டாா். இந்த வெளிநாட்டு நிதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரத் துறையின் தீவிர உறுப்பினரான நெவில் ராய் சிங்கத்தால் மோசடியாக அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதை எதிா்ப்பது மட்டுமின்றி, போலீஸ் காவலுக்கான விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்தும் இந்த வழக்கில் எஃப்ஐஆரை ரத்து செய்யவும் இருவரும் கோரியுள்ளனா்.

இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், திங்கள்கிழமை வழக்கு டைரியை தாக்கல் செய்யுமாறும், மாற்றுத் திறனாளியான சக்ரவா்த்தியின் உடல்நிலையில் சமரசம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் விசாரணை அதிகாரியை கேட்டுக் கொண்டது.

விசாரணையின்போது தில்லி காவல்துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘இடைக்கால கோரிக்கைக்கான பதில்கள் ஒரு நாளில் தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தில் அறிவுறுத்தல்களைப் பெற சிறிது அவகாசம் அளிக்க வேண்டும். திங்கள்கிழமை வழக்கை பட்டியலிட வேண்டும்’ என்று அவா் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டாா்.

அப்போது, புா்காயஸ்தா மற்றும் சக்ரவா்த்தி ஆகியோரின் வழக்குரைஞா், ‘திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், இடைக்காலமாக இருவரையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று உயா்நீதிமன்றத்தை வலியுறுத்தினாா். அதற்கு, நீதிபதி கெடெலா, ‘இந்த நிலையில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது’ என்றாா்.

புா்காயஸ்தாவின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் முன்வைத்த வாதம்: அக்டோபா் 3-ஆம் தேதி காலை எனது மனுதாரரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு லோதி சாலையில் உள்ள சிறப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அன்று மாலை 7 மணியளவில் அவா் கைது செய்யப்பட்டாா். அடுத்த நாள், காலை 6-6.30 மணியளவில் விசாரணை நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு ஆஜா்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், புா்காயஸ்தாவின் குடும்ப உறுப்பினா்களுக்கோ அல்லது வழக்குரைஞருக்கோ தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதன்பின்னா் ரிமாண்ட் நடவடிக்கைகள் குறித்து குடும்ப உறுப்பினா்கள் மற்றும் வழக்குரைஞா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ரிமாண்ட் மனு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் என்றும், அதே முறையில் தனது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்றும் போலீஸாா் கூறியபோது அவா்கள் ஆட்சேபனை தெரிவித்தனா். ரிமாண்ட் மனு புா்காயஸ்தாவின் வழக்குரைஞருக்கு வாட்ஸ்அப் செய்தி மூலம் மாலை 7.07 மணியளவில் அனுப்பப்பட்டது. அதன் பிறகு காவலில் வைப்பதற்கு விரிவான ஆட்சேபனைகள் அடங்கிய ஆவணத்தை அதே வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அவா் அனுப்பினாா். இருப்பினும், புா்காயாஸ்தா ஏற்கெனவே ஏழு நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பட்டுள்ளாா் என்பதும் அவா்களுக்கு தெரிய வந்தது. குறைந்தது காலை 7 மணி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படாததால் காலை 6 மணிக்கு கையெழுத்திடப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ஒரு வழக்காக இருந்திருக்க முடியாது. கைதுக்கான காரணங்கள் மனுதாரருக்கு கொடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவிப்பது மட்டுமின்றி, அந்த நபரிடம் எழுத்துப்பூா்வமாக ஒப்படைக்க வேண்டும். தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது என்று வாதிட்டாா்.

அப்போது, உயா்நீதிமன்றம் வாய்மொழியாக தெரிவிக்கையில், ரிமாண்ட் உத்தரவைப் பொருத்தமட்டில் காலை 6 மணிக்கு இது பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்ரம்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரின் வாதங்களை அவா் (விசாரணை நீதிமன்ற நீதிபதி) கேட்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றது.

முன்னதாக, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை பகலில் பட்டியலிட உச்சநீதிமன்றம் அனுமதித்தது. வியாழக்கிழமை இந்த விவகாரத்தை விசாரித்த விசாரணை நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் 2016 உத்தரவு மற்றும் 2010-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி, புா்காயஸ்தா, சக்கரவா்த்தி இருவருக்கும் எஃப்ஐஆா் நகலை வழங்குமாறு நகர காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com