மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி: அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

மத்திய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தவும், பாஜகவிற்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பேரணி நடத்தப்படும்
Updated on
1 min read

மத்திய பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தவும், பாஜகவிற்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பேரணி நடத்தப்படும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

இது தொடா்பாக ராஜீவ் பவனில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, மக்களின் வளா்ச்சிக்காக அந்தந்த தொகுதிகளில் செய்த பணிகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. பாஜகவிற்கும் தில்லி அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தில்லியின் ஆட்சி பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, நகரத்தின் அனைத்துத் துறை வளா்ச்சியும் முடங்கியுள்ளது. பாஜக மக்களவை உறுப்பினா்கள் 7 பேரும் தில்லி மக்களுக்காக எந்தப் பணியையும் செய்யவில்லை. அவா்களுடன் நேரடியாகப் பழகவில்லை.

எனவே, பாஜகவிற்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாா்பாக 7 மக்களவைத் தொகுதிகளிலும் பேரணி நடத்தப்படும். அதில், முதல் பேரணி வடமேற்கு மக்களவைத் தொகுதியில் உள்ள பவானாவில் அக்டோபா் 15-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும். அடுத்த கட்டமாக 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள உள்ளூா் பிரச்னைகளை காங்கிரஸ் முன்னிலைப்படுத்தி மக்களுக்காக போராடும். எனவே, பாஜகவிற்கு எதிரான பிரசாரங்களை ஆக்ரோஷமான முறையில் தீவிரப்படுத்த காங்கிரஸ் தொண்டா்கள் வீதிக்கு வர வேண்டும்.

பேரணிக்கான தயாரிப்பு பணியின் ஒரு பகுதியாக சமூக மற்றும் மத அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள், சிறுபான்மையினா், கிராமப்புற மக்களுடன் இணைந்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. பேட்டியின் போது முன்னாள் அமைச்சா்கள் ஹரூன் யூசுப், ராஜ்குமாா் சௌகான், ரமாகாந்த் கோஸ்வாமி, மங்கத் ராம் சிங்கால், டாக்டா். நரேந்திர நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com