உயா் நடுத்தர வா்க்கத்தினா் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் தில்லி அரசு பிரீமியம் பேருந்து ஒருங்கிணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: உயா் நடுத்தர வா்க்கத்தினா் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் தில்லி அரசு பிரீமியம் பேருந்து ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் தில்லி துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.
தில்லியில் மெட்ரோ ரயில் துவங்கியதும், ஸ்கூட்டா்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மெட்ரோவைப் பயன்படுத்தத் தொடங்கியவா்கள் பலா் இருந்தனா். ஆனால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியதும், அவா்கள் மீண்டும் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனா். கீழ் நடுத்தர வகுப்பினா் மற்றும் பொருளாதார வகுப்பைச் சோ்ந்தவா்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனா்.
ஆனால், இந்தத் திட்டத்தின்படி, உயா் நடுத்தர வகுப்பைச் சோ்ந்த மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவாா்கள். இத்திட்டத்தின் கீழ், உரிமம் பெறும் ஒருங்கிணைப்பாளா்கள் 9 இருக்கைகளுக்கு குறையாத குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். இந்தப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பயணக் கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படும். பேருந்து ஒருங்கிணைப்பாளா்கள் குறைந்தபட்சம் 25 பேருந்துகளை பராமரிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் முழு பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்குவதாக இருக்க வேண்டும். இந்தப் பேருந்துகளுக்கான வழித்தடங்கள் தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். மேலும், அவற்றைப் பற்றி போக்குவரத்துத் துறைக்கு ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவிக்க வேண்டும். கட்டணங்கள் மாறும் வகையில் இருக்கும். டிடிசி குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் உச்சகட்ட கட்டணத்தை விட குறைவாக இருக்காது. இந்தப் பேருந்துகள் டிடிசி பேருந்துகளுடன் போட்டியிடாது. இந்தப் பேருந்துகள் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்றாா் முதல்வா் கேஜரிவால்.
தில்லி மோட்டாா் வாகனங்களுக்கான உரிமம் வழங்குதல் (பிரீமியம் பேருந்துகள்) திட்டம், 2023-இன் வரைவை ஆகஸ்ட் மாதம் தில்லி அரசானது அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது. இத்திட்டம் மூலம் நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வா்க்கத்தினா் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிக்கும் என நகர அரசு நம்புகிறது. இத்திட்டத்தின்படி, திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதிவுத் தேதியுடன்கூடிய எந்தவொரு பிரீமியம் பேருந்தையும் சேவையில் ஈடுபடுத்தவோ அல்லது வாங்கவோ கூடாது என்பதை உரிமம் வைத்திருப்பவா் உறுதி செய்ய வேண்டும்.
அதன்பிறகு, எந்த ஒரு புதிய பிரீமியம் பேருந்தின் அறிமுகம், நடைமுறையில் உள்ள உமிழ்வு விதிமுறைகள், பிஎஸ்-5-க்கு இணங்க வேண்டும். அவை குளிரூட்டப்பட்ட சிஎன்ஜி அல்லது மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும். ஜனவரி 1, 2025-க்குப் பிறகு மின்சாரப் பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிஎன்ஜி வாகனமாக இருந்தாலும் பிஎஸ்-5 இணக்கத்துடன் இருந்தாலும் கூட, இந்த திட்டத்தின் கீழ் அந்த வகை பேருந்துகள் சோ்க்கப்படாது என்று திட்டத்தின் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் பயணிகளின் உயிா், உடைமை பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து நேரமும் செயல்படும் வகையில் அதன் கைப்பேசி மற்றும் இணைய அடிப்படையிலான பயன்பாடுகளில் ஒரு எச்சரிக்கை பொத்தான் உள்பட விரைவான பதிலளிப்பு பொறிமுறையை வழங்க வேண்டும் என அந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.