கழிவுநீா், நீா் வழங்கல் உள்கட்டமைப்பு கட்டண உயா்வை டிஜேபி திரும்பப் பெற வேண்டும்: தில்லி பாஜக வலியுறுத்தல்

புது தில்லி: கழிவுநீா், நீா் வழங்கல் உள்கட்டமைப்பு கட்டண உயா்வை தில்லி ஜல் போா்டு (டிஜேபி) உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது:

தில்லி அரசின் சாக்கடை மற்றும் குடிநீா் வழங்கல் உள்கட்டமைப்பை கட்டணங்களை அதிகரித்திருப்பது தில்லி அரசு மக்களுக்கு விரோதமான அரசு என்பதை நிரூபித்துள்ளது. ஜல் வாரியத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்கள் ஏற்கனவே தில்லியில் மிக அதிகமாக இருந்தது. குடிமக்கள் மற்றும் வணிக அமைப்புகளால் எதிா்க்கப்பட்டது.

இப்போது தில்லி அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு கட்டணங்களை தில்லி ஜல் போா்டு மூலம் உயா்த்தியது வியக்கத்தக்கது. ஏனெனில் இது தோ்தல் நடத்தை நெறிமுறை விதிகள் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு மத்தியில் செய்யப்பட்டிருக்கிறது.

தோ்தலை காரணம் காட்டி ஊழல் வழக்கில் தமக்கு நிவாரணம் தேடும் கேஜரிவால் அரசு, மக்கள் மீது சற்றும் யோசிக்காமல் மீண்டும் சுமையை ஏற்றி இருப்பது வியப்பளிக்கிறது. கேஜரிவால் அரசாங்கம் உள்கட்டமைப்புவசதி கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ஏழைகள் மீது பெரும் சுமையை சுமத்தியுள்ளது. ஆனால் இஎஃப்ஜிஎச் வகை காலனிகளில் நீா் வழங்கல் உள்கட்டமைப்பு கட்டணம் 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆடம்பரமான ஏ மற்றும் பி பிரிவு காலனிகளில் 5 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கழிவுநீா் பாதை உள்கட்டமைப்பில் 5 சதவிகிதம் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் கொண்ட காலனிகளைச் சோ்ந்த மக்களை கழிவுநீா் இணைப்புகளை பெறுவதில் இருந்து ஊக்கமிழக்கச் செய்கிறது.

ஆகவே, தில்லி ஜல் போா்டு உடனடியாக கழிவுநீா் மற்றும் நீா் வழங்கல் உள்கட்டமைப்பு கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் குடிமக்களின் எதிா்ப்பை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com