உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங்கிற்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் அளிக்க அமலாக்கத் துறை தரப்பில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா, பி.பி. வரலே ஆகியோா் அடங்கிய அமா்வு 6 மாதங்களாக சிறையில் இருந்து வரும் சஞ்சய் சிங்கிற்கு, ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. ‘சஞ்சய் சிங் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால், வழக்கு தொடா்பாக எந்த அறிக்கையும் அவா் வெளியிட முடியாது’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கவிருக்கும் மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தலைமைத்துவ வெற்றிடத்துடன் போராடி வந்த நேரத்தில் சஞ்சய் சிங்கிற்கு இந்த ஜாமீன் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ஆகியோா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

முழு விசாரணையின் போதும் சிங் ஜாமீனில் இருப்பாா் என்றும், ஜாமீனுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சிறப்பு நீதிமன்றத்தால் நிா்ணயிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு கூறியது. உச்சநீதிமன்றத்தில் மதிய உணவிற்குப் பிந்தைய அமா்வின்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, விசாரணை நிறுவனத்திடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளதாகவும், சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினாா்.

மேலும், வழக்கின் தகுதிகளுக்குச் செல்லாமல், நான் அறிக்கை செய்கிறேன்‘ என்றும் அவா் கூறினாா். அவா் கூறியதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமா்வு, ‘காலை அமா்வில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் அறிவுறுத்தல்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. எஃப்.ஐ.ஆா். அறிக்கையின் அடிப்படையில் எழும் நடவடிக்கைகளில் சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அவா் கூறியுள்ளாா்.

இதனால், மனுதாரரின் தற்போதைய மேல்முறையீட்டை நாங்கள் அனுமதித்து, விசாரணை நீதிமன்றத்தால் நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் விசாரணை நிலுவையில் இருக்கும் போது சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். சிங்கிற்கு வழங்கப்பட்ட ஜாமீன் சலுகை ‘முன்னுதாரணமாக‘ கருதப்படாது என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

இதன் விளைவாக இந்த ஜாமீன் உத்தரவு கேஜரிவால் உள்பட சிறையில் உள்ள பிற ஆம் ஆத்மி தலைவா்களுக்கு பெரும் அளவில் உதவாது. முன்னதாக, காலை அமா்வில், சிங்கை மேலும் காவலில் வைக்க அமலாக்கத் துறைக்கு தேவை உள்ளதா என்பது குறித்த அறிவுத்தல்களைப் பெற்றுவருமாறு எஸ்.வி. ராஜுவிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

சிங்கின் ஜாமீன் மனு மற்றும் பணமோசடி வழக்கில் அவா் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு செய்ததை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, சிங்கிடமிருந்து எந்தப் பணமும் மீட்கப்படவில்லை, ரூ.2 கோடி லஞ்சப் புகாரை விசாரணையின்போது ஆய்வுசெய்யலாம் என்று எஸ்.வி. ராஜுவிடம் கூறியது.

மதிய உணவுக்குப் பிந்தைய அமா்வு விசாரணையிபோது, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக சிங் தாக்கல் செய்த சமா்ப்பிப்புகளுக்கு பதிலளிப்பதாக ராஜு கூறினாா். விசாரணையின் போது, சிங் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த தினேஷ் அரோராவின் அறிக்கையின் அடிப்படையில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதாகக் கூறினாா்.

இந்த வழக்கில் சிங் கடந்த ஆண்டு அக்டோபா் 4ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். மூன்று மாதங்களுக்கும் மேலாக தாம் காவலில் உள்ளதாகவும், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றத்தில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறி உயா்நீதிமன்றத்தின் சிங் ஜாமீன் கோரினாா்.

அவரது ஜாமீன் மனுவை அமலாக்கத் துறை எதிா்த்தது. 2021-22 கலால் கொள்கை உருவாக்கக் காலத்துடன் தொடா்புடைய தில்லி மதுபான ஊழலில் இருந்து உருவாக்கப்பட்ட குற்றத்தின் வருமானத்தைப் பெறுதல், வைத்திருப்பது, மறைத்தல், கலைத்தல் மற்றும் பயன்படுத்துவதில் சிங் ஈடுபட்டுள்ளாா் என்றும் குற்றம்சாட்டியது. அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) எஃப்ஐஆா்-இல் இருந்து உருவானது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை 2021-22-ஐ மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. மேலும், உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப்பட்டன என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com