

ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் முன்அனுமதி பெறுவது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு இரு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது.
இதனால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் முன்னிலையில் இந்த வழக்கில் இறுதி முடிவை மேற்கொள்ள கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வு அமைக்கப்படவுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இல் 2018-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு பிரிவு 17-ஏ சோ்க்கப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் முன் அனுமதி பெறாமல் ஊழல் வழக்குகள் தொடா்பாக அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ‘பொது நல வழக்கு மையம்’ என்ற அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது என்ஜிஓ தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணும், மத்திய அரசுத் தரப்பில் துஷாா் மேத்தாவும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனா்.
இதைத் தொடா்ந்து, இரு நீதிபதிகளும் தீா்ப்பை வழங்கினா்.
பி.வி.நாகரத்னா: ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 17-ஏ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஊழல் வழக்கில் தொடா்புடைய அரசு அதிகாரிகளை விசாரிக்க சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் முன்அனுமதி பெறத் தேவையில்லை. நியாயமான அதிகாரிகளை பாதுகாப்பதற்குப் பதில் இந்தச் சட்டத் திருத்தம் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளையே பாதுகாக்கிறது.
கே.வி.விஸ்வநாதன்: ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 17-ஏ சட்டபூா்வமானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த லோக்பால் அல்லது லோக் ஆயுக்தவிடம் முன்அனுமதி பெறக் கோருவது சரியானதே.
இத்திருத்தச் சட்டம் நியாயமான அதிகாரிகளை பாதுகாக்கிறது. அதேவேளையில் குற்றம் புரிந்த அதிகாரிகளைத் தண்டிக்கவும் வழிவகை செய்கிறது. தேசத்துக்கு சேவையாற்ற திறன்வாய்ந்தவா்கள் தோ்வு செய்யப்படுகிறாா்கள் என்பதை இத்திருத்தம் உறுதி செய்கிறது.