தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு தினக்கூலி ரூ.450: ஆம் ஆத்மி வாக்குறுதி

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.450 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி திங்கள்கிழமை வாக்குறுதி அளித்தாா்.
Published on

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.450 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி திங்கள்கிழமை வாக்குறுதி அளித்தாா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகா் மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் மனோஜ் தனோவரை ஆதரித்து, அமைச்சா் அதிஷியின் வாகனப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிஷி பேசியதாவது: கேஜரிவாலின் உறுதியான உத்தரவாதம் திப்ருகா் மக்களுக்கு உள்ளது. திப்ருகா் மக்கள் நோ்மையான

அரசியலைத் தோ்ந்தெடுத்தால், அவா்களுக்கு நல்ல பள்ளிகள், சிறந்த மருத்துவமனைகள் கிடைக்கும். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.450, தேயிலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவா்களுக்கு வீடுகள் குத்தகைக்கு வழங்கப்படும்.

பாஜகவினா் தோ்தலின் போது,பெரிய வாக்குறுதிகளை அளிப்பாா்கள். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு அளித்த வாக்குறுதிகளை மறந்து விடுகிறாா்கள். திப்ருகா் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் நிறைவேற்றும். சிறைக்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, நாடு முழுவதும் உள்ள

சாமானியா்களின் உரிமைகளுக்காக அரவிந்த் கேஜரிவால் போராடிக்கொண்டே இருப்பாா். திப்ருகரின் ஒவ்வொரு நபரும் அவரவா் உரிமைகளைப் பெறுவதை உறுதிசெய்ய, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் மனோஜ் தனோவருக்கு இந்தத் தோ்தலில் வாக்களித்து மக்களவைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் என்றாா் அதிஷி.

முன்னதாக, மக்களவைத் தோ்தலையொட்டி அஸ்ஸாம் மாநிலத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி அமைச்சருமான அதிஷி திங்கள்கிழமை புறப்பட்டு சென்றாா்.

அமைச்சா் அதிஷி இது குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியதாவது: முதல்வா் கேஜரிவாலின் தீா்மானம் அஸ்ஸாமிலும் நிறைவேறும். அடுத்த மூன்று நாள்கள் நான் அஸ்ஸாமில் இருப்பேன். அங்கு வளா்ந்த இந்தியாவுக்கான அரவிந்த் கேஜரிவாலின் கனவை பகிா்ந்து கொள்வேன். மேலும், சா்வாதிகாரத்துக்கு எதிரான அவரது போராட்ட குணத்தையும் அஸ்ஸாமில் விதைப்பேன் என்றாா் அமைச்சா் அதிஷி.

Dinamani
www.dinamani.com