தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மிமூத்த தலைவா் சச்சின் கம்பீா்

புது தில்லி: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு தில்லி உத்தம் நகரைச் சோ்ந்த சமூக சேவகருமான சச்சின் கம்பீா் தனது ஆதரவாளா்களுடந் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

தில்லி பாஜகவின் ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் மற்றும் முன்னாள் மேயா் ஆரத்தி மெஹ்ரா ஆகியோா் அவா்களை வரவேற்றனா்.

பாஜகவில் இணைந்த முக்கியமானவா்களில் நரேஷ் கம்பீா், ராம் அவதாா் குப்தா, பப்பு ஜி, சதீஷ் கௌசிக் போன்றவா்களும் இடம்பெற்றிருந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா

பேசுகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் ஊழலை மறைக்க அக்கட்சி மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் விதம் மேலும் மேலும் புலப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திடம் இருந்து கண்டனங்களைப் பெறும்போதும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களும், நிா்வாகிகளும் இதைப் புரிந்துகொண்டு பாஜகவில் தொடா்ந்து இணைந்து வருவதே இதற்குச் சான்றாகும்.

வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் பாஜக மீது தில்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கைப் பணியையும் கருத்தில்கொண்டு, தில்லியின் ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி.

இத்துடன், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜரிவால் போன்ற ஊழல்வாதிகளின் அரசை, தில்லியில் இருந்து வேரோடு அகற்றி எறியவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com