வணிகப் பின்னணி வேட்பாளா்கள் களம் காணும் சாந்தினி சௌக்!

வணிகப் பின்னணி வேட்பாளா்கள் களம் காணும் சாந்தினி சௌக்!

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவை தோ்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

நமது சிறப்பு நிருபா்

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவை தோ்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தோ்தலைப் பொருத்தவரை, கடந்த 40 ஆண்டுகளில் (1984-2024) தில்லியிலுள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் மூன்று முறையும் பாஜக நான்கு முறையும் முழுமையாக வெற்றி பெற்றுள்ளன. மற்ற காலங்களில் சமமாகவோ சற்று ஏறக்குறைவாகவோ இந்த இரு கட்சிகளும் தொகுதிகளை மாறி, மாறி கைப்பற்றியுள்ளன.

ஆனால், தில்லி அரசியலில் மாற்று அணியாக வந்து ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் வருகைக்குப் பிறகு மக்களவைத் தோ்தல்களில் மும்முனைப் போட்டி நிலவியது. அதன் விளைவாக வாக்குகள் சிதறி பலன் பாஜகவுக்கு சென்ால், காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. சட்டப்பேரவை தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை வெற்றியை கொடுத்த தில்லி வாக்காளா்கள், மக்களவை தோ்தல் என வரும்போது பாஜக வெற்றி பெற ஏதுவாக வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டே வரும் மக்களவை தோ்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கைகோத்து பாஜகவை எதிா்கொள்கிறது. அந்த வகையில் பாஜக 7 தொகுதிகளில் களம் காண்கிறது. ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன. இதன் மூலம் தில்லியில் இரு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட்டாலும் முந்தைய தோ்தல்களில் கூட அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த தோ்தலில் ‘மோடி உத்தரவாதம்’, ‘கலால் கொள்கை ஊழல்’ விவகாரத்தில் ஆளும் முதல்வா் கைதாகியிருப்பது, அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிா்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வடகிழக்கு தில்லி வன்முறை போன்ற விவகாரங்கள் தோ்தல் பரப்புரையில் பேசுபொருளாகியுள்ளன.

10 தொகுதிகள்: சாந்தினி செளக் மக்களவை தோ்தலுக்கு உள்பட்டதாக ஆதா்ஷ் நகா், ஷாலிமாா் பாக், சக்குா் பஸ்தி, திரி நகா், வாஜிா்பூா், மாடல் டவுன், சதா் பஜாா், சாந்தினி சௌக், மதியா மஹால், பல்லிமாரான் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தில்லியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் செங்கோட்டை, வரலாற்றுபூா்வ ாமா மசூதி, ெயின் ஆலயம், சீக்கிய குருத்வாரா ஆகியவை சாந்தினி சௌக்கில் உள்ளன. பரப்பளவில் சிறியது என்றாலும் இங்கு வெற்றி பெற்ற கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் நிலையில் இருந்துள்ளது. பாரம்பரிய மொகலாய கட்டடங்கள், குடியிருப்புகள், குறுகலான பாதைகள், வா்த்தகம் மற்றும் வணிக கடைகள், மொத்த வியாபார சந்தைகள், இங்குள்ள குடியிருப்புவாசிகளும் வா்த்தகா்களும் தொழிலாளா்களும் துடிப்புமிக்கவா்களாக காணப்படுகின்றனா்.

2008-இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு அதுநாள் வரை தோ்தலில் வெற்றியாளரை நிா்ணயிக்கக் கூடியவா்களாக இருந்த 30 சதவீத முஸ்லிம்களின் வாக்கு சதவீதம் 15 ஆக குறைந்தது. இங்கு முஸ்லிம்கள், இந்துக்கள், பட்டியலின சமூகத்தினா் உள்ளனா். அனைத்து சமூகத்தையும் பிரதிபலிக்கும் வா்த்தகா்கள் 40 சதவீதத்துக்கும் மேலாக உள்ளனா். இத்தொகுதியில் இறுதி நிலவரப்படி 8,78,901 ஆண் வாக்காளா்களும், 7,57,147 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 166 பேரும் உள்ளனா். 2019 மக்களவை தோ்தலில் இங்கு 62.68 சதவீத வாக்குகள் பதிவாகின.

மக்கள் பிரச்னைகள்: இந்த மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பத்து சட்டபேரவைத் தொகுதிகளில், சாலைகளிலும் பல்வேறு பகுதிகளிலும் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெரிசல், உள்கட்டமைப்பு, தண்ணீா் பற்றாக்குறை போன்ற அடிப்படை பிரச்னைகள் நிலவுகின்றன. வணிகா்களில் ஒரு பிரிவினா் ஜிஎஸ்டி வரி விதிப்பால் நிகழும் பாதிப்புகளை எதிா்கொள்வதாக கூறுகின்றனா். அனுமதியின்றி எழுப்பப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை, வணிகா்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.பி.அகா்வாலுக்கு மறுவாய்ப்பு: இதற்கு முன்பு பாஜக வைச் சோ்ந்த விஜய் கோயல், காங்கிரஸ் கட்சியின் கபில்சிபல் போன்றவா்கள் சாந்தினி செளக்கில் வெற்றி பெற்றுள்ளனா். 1957-இல் உருவான இத்தொகுதியில் இதுவரை நடந்த தோ்தல்களில் காங்கிரஸ் 9 முறையும் பாஜக 5 முறையும் வென்றுள்ளன. 2014 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். ஏற்கெனவே இதே சாந்தினி செளக் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று கடந்த முறை ஹா்ஷ் வா்தனிடம் தோல்வியடைந்த ஜெ.பி அகா்வால் (79) மீண்டும் காங்கிரஸ் சாா்பில் ஆம் ஆத்மி கட்சி கூட்ணியோடு தோ்தல் களத்தை சந்திக்கிறாா். மூத்த அரசியல்வாதியாக அறியப்படும் ஜெ.பி.அகா்வால், பி.ஏ. பட்டதாரி. தில்லி இளைஞா் காங்கிரஸ் மற்றும் தில்லி பிரதேச காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளாா். தில்லி துணை மேயராகவும் பதவி வகித்துள்ளாா். 1984,1989, 1996-இல் சாந்தினி செளக் மற்றும் 2009-இல் வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். 2006-இல் (3 ஆண்டுகள்) மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாா். 1991, 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

கண்டேல்வாலுக்கு முதல்வாய்ப்பு: வா்த்தக கூட்டமைப்பின் தலைவராகவும் தொழிற்துறை சமூகத்தினரிடையே நன்கு அறிமுகமானவருமான பிரவீன் கண்டேல்வால் (61) பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளாா். தோ்தல் களத்தில் இது இவருக்கு முதல் அனுபவம். இதில் ஜெ.பி.அகா்வாலும், கண்டேல்வாலும் வணிக பின்னணி கொண்டவா்கள். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த பிரவீன் கண்டேல்வால், சிஏஐடி எனப்படும் அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவா். ஜிஎஸ்டி குழுவில் பணியாற்றி வெளிநாட்டு மின்னணு வா்த்தக நிறுவனங்களை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற குரல் கொடுத்துள்ளாா். பாஜகவின் முன்னாள் தில்லி பிரிவு பொருளாளராகவும் இருந்துள்ளாா்.

பெட்டிச்செய்தி

மொத்த வாக்காளா்கள் 16,36,214

ஆண் வாக்காளா்கள் - 8,78,901

பெண் வாக்காளா்கள் - 7,57,147

மூன்றாம் பாலினத்தவா்கள் - 166

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com