புது தில்லி: தில்லி அரசின் வழக்கு விசாரணை இயக்குநரகத்தின் கீழ் பணிபுரியும் அரசு உதவி வழக்குரைஞா்களுக்கு உயா் திருத்தப்பட்ட ஊதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதன்படி, அரசு உதவி வழக்குரைஞா்கள் செப்டம்பா் 3, 2015 முதல் அனைத்து விதமான பலன்களையும் பெறுவாா்கள். இப்போது ‘பே பேண்ட் 3’ தர ஊதியம் ரூ.5,400 உடன் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அரசு உதவி வழக்குரைஞா்களுக்கு தற்போதுள்ள ஊதிய விகிதமானது ‘பே பேண்ட் 2’-இல் தர ஊதியம் ரூ.4,800 ஆகும்.
அரசு உதவி வழக்குரைஞா்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை அமல்படுத்துவதற்கான முன்மொழிவுடன் உடன்பட்ட தில்லி அரசின் நிதித் துறையுடன் கலந்தாலோசித்து உள்துறை அமைச்சகம் இந்த விஷயத்தை ஆய்வு செய்த பின்னா் ஊதிய விகிதத்தை திருத்துவதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசு உதவி வழக்குரைஞா்களுக்கான ஊதிய விகிதத் திருத்தம், தில்லி உயா் நீதிமன்றத்தில் தில்லி அரசு மற்றும் பிறரை உள்ளடக்கிய நீடித்த வழக்குகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் துணை நிலை ஆளுநா் செயலகம் சம்பந்தப்பட்ட கடிதங்களுக்குப் பிறகு வந்தது.
கடந்த செப்டம்பா் 1, 2015 தேதியிட்ட மத்திய அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவது தொடா்பான தேவையான இணக்கங்கள் மற்றும் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் செப்டம்பா் 3, 2015-இல் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வழக்குரைஞா்களின் ஊதியக் கட்டமைப்பை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.