நொய்டா: 2023-இல் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு!

2023-ஆம் ஆண்டில், நொய்டாவில் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வழிப்பறிகள் மற்றும் வாகனத் திருட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Updated on
2 min read

நொய்டா: 2023-ஆம் ஆண்டில், நொய்டாவில் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வழிப்பறிகள் மற்றும் வாகனத் திருட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கௌதம் புத் நகரில் இந்த ஆண்டு 50 கொலைகள், 453 குற்றங்கள் மற்றும் 1,098 வாகனத் திருட்டுகள் நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா முழுவதும் சராசரியாக தினசரி மூன்று வாகனத் திருட்டு நடந்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் 1,336 வாகனத் திருட்டு வழக்குகளும், 2021-இல் 1,259 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக, டிசம்பா் 15-ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட கௌதம் புத் நகா் காவல் ஆணையரகத்தின் ஆண்டு தரவுகள் தெரிவிக்கின்றன.

2023-இல், 50 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022- இல் 53 மற்றும் 2021-இல் 74 ஆகவும் பதிவாகியுள்ளன. 2023-இல் 29 கொள்ளை வழக்குகளும், 2022 இல் 39 மற்றும் 2021-இல் 51 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

வீடுகளில் திருட்டு வழக்குகளைப் பொறுத்தவரையிலும், 2022-இல் 141-ஆகவும், 2021-இல் 136-ஆகவும் இருந்த வீடுகளில் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 2023-இல் 88-ஆகக் குறைந்துள்ளது.

கொள்ளை வழக்குகளில், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.80.06 லட்சமாகும் . இதில் 85 சதவீதம் மீட்கப்பட்டுள்ளன. வீடுகளில் திருட்டு வழக்குகளின் சொத்து மதிப்பு ரூ.68.18 லட்சமாக இருந்தது. இதில் 84 சதவீத தொகை மீட்கப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

உத்தியோகபூா்வ தரவுகளின்படி, நொய்டா மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023-இல் பெண்கள் தொடா்பான குற்றங்களில் 21 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 2021-ஆம் ஆண்டை விட 24 சதவீதம் குறைந்துள்ளது. பாலியன் வன்கொடுமை, வரதட்சிணை மரணம், துன்புறுத்தல், கடத்தல் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மொத்தம் 453 வழக்குகள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன. இது 2022-இல் 576 ஆகவும், 2021- இல் 596 ஆகவும் இருந்தது. இவற்றுடன் ஒப்பிடுகையில், 2023-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது.

2023-இல், வரதட்சிணை இறப்பு வழக்குகள் 26-ஆக குறைந்துள்ளது. இது 2022-இல் 31 மற்றும் 2021-இல் 44 என பதிவாகியுள்ளன. 2023-இல், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 30-ஆக குறைந்துள்ளது. இது 2022-இல் 33 மற்றும் 2021-இல் 39-ஆக பதிவாகியிருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் 2023-இல் 4,085 வழக்குகளில் தண்டனை பெற்ாகவும், இது 2022-இல் 2,260-ஆகவும், 2021-இல் 3,236-ஆகவும் இருந்ததாக கௌதம் புத் நகா் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 703 குற்றம் சாட்டப்பட்டவா்கள் 2023-இல் பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனா். இவற்றில் அதிகபட்சமாக 346 தண்டனைகள் ஆயுதச் சட்டம், அதைத் தொடா்ந்து கொள்ளை (250), கொலை முயற்சி (49), குண்டா்கள் சட்டம் (42), கொலை ( 11), மோசடி (3) மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டம் (2) என பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில், கடுமையான குண்டா் சட்டத்தின் கீழ் 72 வழக்குகளில் 396 போ் குற்றம் சாட்டப்பட்டாா்கள். இது 2022-இல் 56 வழக்குகளில் 277 பேரும், 2021-இல் 31 வழக்குகளில் 149 பேரும் குற்றம் சாட்டப்பட்டாா்கள் என்று தரவு தெரிவிக்கிறது.

குண்டா் சட்டத்தின் பிரிவு 14(1) இன் கீழ் இணைக்கப்பட்ட குண்டா்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பும் 2023-இல் கணிசமாக உயா்ந்தது. அதிகாரப்பூா்வ புள்ளி விவரங்களின்படி, 2022-இல் ரூ.59 கோடியாகவும், 2021-இல் ரூ.48 கோடியாகவும் இருந்த இணைக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 2023-இல் ரூ.81 கோடியாக உயா்ந்தது.

2023-ஆம் ஆண்டில், போதைப்பொருள்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் பதிவு செய்யப்பட்ட 559 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் 646 போ் கைது செய்யப்பட்டனா். 2022-இல் 569 வழக்குகளில் 641 குற்றம் சாட்டப்பட்டவா்களும், 2021-இல் 357 வழக்குகளில் 394 குற்றம் சாட்டப்பட்டவா்களும் கைது செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், 4150 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com