புது தில்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்காலை மூடல் விவகாரம் தொடா்பான வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மதம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, இது தொடா்பாக வேதாந்தா குழும நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் முன்வைத்த வாதத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது.
நீதிபதிகளிடம் ஷியாம் திவான், ‘இந்த வழக்கு ஜனவரி 22 -ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை அன்றைக்கு விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா். அதற்கு தலைமை நீதிபதி, ‘எந்தவொரு அரசியல்சாசன அமா்வு விவகாரங்களும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை பகல்வேளையில் உறுதி செய்த பிறகு வழக்கின் தரப்பினரின் வழக்குரைஞா்களுக்குத் தெரிவிக்கப்படும்’ என்று கூறினாா்.
முன்னா், வேதாந்தா குழுமத்தின் மனுவை விசாரிக்க இரண்டு பிரத்யேக தேதிகளை ஒதுக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. தூத்துக்குடி ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை உள்ளூா் அளவிலான கண்காணிப்புக் குழுவின் மேற்பாா்வையில் பராமரிக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி வழங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 10- ஆம் தேதியிட்ட தனது உத்தரவுக்கு இணங்க தகுந்த முடிவுகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் கேட்டுக் கொண்டிருந்தது.
உச்சநீதிமன்றம் ஏப்ரல் 10, 2023-ஆம் தேதி பிறப்பித்திருந்த உத்தரவில், ஆலையில் மீதமுள்ள ஜிப்சத்தை வெளியேற்ற அனுமதித்திருந்தது. மேலும், வேதாந்தா நிறுவனம் கோரியபடி தேவையான மனிதவளம் கிடைக்கச் செய்யவும் அனுமதித்திருந்தது. மேலும், ஆலை வளாகத்தில் சிவில் மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு ஒற்றுமை மதிப்பீட்டை மேற்கொள்வது, உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுதல், அவற்றை எடுத்துச் செல்வது மற்றும் செயலிழந்து கிடக்கும் பிற மூலப்பொருள்களை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் பரிந்துரைக்கவில்லை என்றும் உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்யாத நடவடிக்கைகள் விவகாரத்தில், கூடுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பதை தமிழக அரசு மீண்டும் ஆய்வு செய்யும் என்று தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் தெரிவித்திருந்ததையும் உச்சநீதிமன்றம் தனது ஏப்ரல் 10-ஆம் தேதியிட்ட உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
முந்தைய விசாரணையின் போது, தமிழ்நாடு தரப்பு வழக்குரைஞா், ஏப்ரல் 10-ஆம் தேதி உத்தரவின் ஒரு பத்தியில் உள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தாா். மேலும், உச்சநீதிமன்றம், ‘ஏப்ரல் 10, 2023 தேதியிட்ட உத்தரவின் நான்கு மற்றும் ஐந்தாவது பத்திகளில் உள்ள கருத்துகள் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய அனைத்து முடிவுகளும் ஜூன் 1, 2023 அன்று அல்லது அதற்கு முன்னா் தமிழக அரசால் எடுக்கப்பட வேண்டும்’ என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று கூறியிருந்தது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இறுதியாக விசாரித்து முடிப்பதற்காக விசாரணைக்குப் பட்டியலிட்டிருந்தது.
முன்னதாக, தாமிர உருக்காலையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மாசுபாட்டை எதிா்த்து மே 22, 2018 அன்று போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 13 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். மாசுபாடு குறித்த கவலைகள் தொடா்பாக நிகழ்ந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடா்ந்து வேதாந்த குழுமத்தின் ஸ்டொ்லைட் ஆலைக்கு சீல் வைத்து நிரந்தரமாக மூடுமாறு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு 2018, மே 28-ஆம் தேதி உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.