/

கோவை தூய்மைப் பணியாளா்கள் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரும் மனுவைஅவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி

Updated On :3 ஜனவரி 2024, 6:30 pm

கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோயம்புத்தூா் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் 2018-இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு ஜனவரியில் விசாரித்த உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாளா்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது. இதில் எதிா்மனுதாரருக்கு சட்டப்பூா்வ நோட்டீஸ் அனுப்பவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கே.ஜெயபால் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த மனு ஜனவரி 25-இல் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் இறுதியில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமாா் ஆகியோா் அமா்வு முன் புதன்கிழமை தமிழக அரசின் சாா்பில் வழக்குரைஞா் டி.குமணன் ஆஜராகி, உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மனோஜ் செல்வராஜ், ‘தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் தற்போது வரையில் தினக்கூலிகளாகவே உள்ளனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீது நாங்கள் இன்னும் பதில் மனுகூட தாக்கல் செய்யவில்லை’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்கள் முதலில் பதிலளிக்கட்டும் எனக் கூறிய நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுவை, அவசரமாக பட்டியலிடக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.