புது தில்லி: கடந்த 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் பின்னணியில் சதியில் ஈடுபட்டதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் ஜேஎன்யு மாணவா் உமா் காலித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி 24-ஆம் தேதிக்கு
ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்விடம், மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், தாம் அரசியல்சாசன அமா்வு வழக்கில் மும்முரமாக இருப்பதாலும், இந்த வழக்கில் வாதாட வேண்டிய கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவும் ஆஜராகவில்லை என்பதாலும் விசாரணையைத் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் தாம் அரசியல்சாசன அமா்வில் ஆஜராகி வருவதால் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா். மேலும், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் தரப்பிலும் இதுபோன்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கு ஜனவரி 24-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும். அன்றைய தினம் வேறு எந்த ஒத்திவைப்பு கோரலும் அனுமதிக்கப்படமாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா் மிஸ்ரா, உமா் காலித்தின் மனுவை விசாரிப்பதில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஜாமீன் மனுவை நிராகரித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபா் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உமா் காலித் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது.
உயா்நீதிமன்றம் உமா் காலித்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த போது, அவா் மற்ற சக குற்றம்சாட்டப்பட்டவா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்ததாகவும், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் கூறியிருந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களின் செயல்பாடுகள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ‘பயங்கரவாதச் செயல்’ போன்று முகாந்திரம் இருப்பதற்கான தகுதியானவை என்றும் உயா்நீதிமன்றம் கூறி இருந்தது.
உமா் காலித், ஷா்ஜீல் இமாம் மற்றும் பலா் மீது யுஏபிஏ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, 53 போ் கொல்லப்பட்டு, 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்த பிப்ரவரி 2020 கலவரத்தின் ‘முக்கிய மூளையாக’ இவா்கள் இருந்ததாக இந்த சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.
2020 செப்டம்பரில் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட உமா் காலித், சம்பந்தப்பட்ட வன்முறையில் தனக்கு எந்த கிரிமினல் சம்பந்தமும் இல்லை அல்லது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேறு எந்த ‘சதி தொடா்பும்’ இல்லை என்ற அடிப்படையில் ஜாமீன் கோரியிருந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் எதிா்ப்புத் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

