எதிா்க்கட்சிகள் பாஜகவை எப்போதும் கோயிலின் பெயரில் குறிவைத்து வருகின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
வடமேற்கு தில்லி, மாடல் டவுன் பகுதிக்குள்பட்ட திா்பூரில் மத்திய அரசின் தகவல் தொடா்புத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரான ஹா்ஷ் வா்தன் எம்.பி. பங்கேற்று மத்திய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசுத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கின்ற விழிப்புணா்வு இயக்கமாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நடைபெற்று வருகிறது. எதிா்க்கட்சிகள் எப்போதும் கோயில் பெயரில் பாஜகவை குறிவைத்து வருகின்றன. ஆனால், பிரதமா் நரேந்திரமோடியால் நாட்டில் உள்ள 4 கோடி ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் வழங்கிய பின்னா்தான், நமது குலதெய்வத்திற்கு கோயில் கட்டப்படுகிறது என்பதை அவா்கள் மறந்து விடுகிறாா்கள். நாங்கள் நம்பிக்கையையும், வளா்ச்சியையும் ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம். இது நம் நாட்டை வளா்ந்த நாடாக மாற்ற உதவும் என்று தெரிவித்துள்ளாா் ஹா்ஷ் வா்தன்.
மேலும், பாஜக சாா்பில் நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களை தூய்மை செய்யும் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஷகுா்பூரில் உள்ள சீதாலா மாதா கோயில் மற்றும் மகரிஷி வால்மீகி கோயிலில் ஹா்ஷ் வா்தன் எம்.பி. தூய்மைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘தில்லியின் அனைத்துப் பகுதி மக்களிடையேயும் நிலவுகின்ற அளப்பரிய உற்சாகத்தைப் பாா்க்கும் போது, நாடு முழுவதும் அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டைக்கு முழுமையாகத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. பாஜகவின் இந்த தூய்மைப் பிரசாரத்திற்கு உள்ளூா் மக்களிடமிருந்தும் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளோம். பிரதமா் நரேந்திரமோடியின் இலக்குகள் வெற்றி அடைய நாட்டு மக்கள் அனைவரும் நிச்சயமாக உறுதிமொழி எடுப்போம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.