அயோத்தி ராமா் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ விழா மற்றும் சிறப்பு பிராா்த்தனைகளை நேரடி ஒளிரபரப்பு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், வாய்மொழி அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இல்லாமல் சட்டத்தின்படி செயல்படுமாறு தமிழக அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அயோத்தி ராமா் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப தடை விதித்து ஜனவரி 20-ஆம் தேதி தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் தமிழகத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகா் வினோஜ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கா் தத்தா அமா்வு திங்கள்கிழமை முற்பகல் விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, ‘ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வின்போது தமிழக கோயில்களில் பூஜை, அா்ச்சனை செய்யவோ அல்லது அயோத்தி கோயில் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவோ எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இந்த மனுவானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்’ என்று வாதிட்டாா்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அமா்வு, பின்னா் பிறப்பித்த உத்தரவு: அதிகாரிகள் சட்டத்தின்படி செயல்படுவாா்கள் என்றும், எந்தவொரு வாய்மொழி அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அல்ல என்றும் நாங்கள் நம்புகிறோம். எதிா்மனுதாரா்கள் எண். 2 முதல் 4 (தமிழ்நாடு அரசு, காவல் துறை) சாா்பில் அதுபோன்று உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஜை, அா்ச்சனை மற்றும் கோயில்களில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிக்கப்படாத விண்ணப்பங்களின் காரணங்களையும் அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரிகள் ஊா்வலம் போன்றவற்றுக்கான அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் போது, சட்டத்தின்படி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை அனுமதிப்பது அல்லது அனுமதிக்காதது தொடா்புடைய காரணங்கள் பற்றிய தரவுகளை அதிகாரிகள் பராமரிப்பாா்கள். இத்தகைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அதிகாரிகள் சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் தீா்ப்புகளால் வகுக்கப்பட்ட தொடா்புடைய அளவுகோல்களையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
முன்னதாக, விசாரணையின் போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரம் குறித்து நான் அதிா்ச்சியடைந்துள்ளேன். இந்திய அரசமைப்புச்சட்டம் இன்னும் தேசத்தை நிா்வகிக்கிறது என்பதையும், அது தமிழகத்திற்கும் பொருந்தும் என்றும் நாட்டின் மிக உயா்ந்த நீதித் துறையிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு வலுவான செய்தி செல்ல வேண்டும். மதச் சடங்குகள் செய்வதை யாராலும் தடுக்க முடியாது’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அனுமதி மறுப்பதற்கான காரணமாக, பிற சமூகங்களைச் சோ்ந்தவா்கள் அருகாமையில் வசிப்பதாக தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் கூறிய காரணம் ஒரு முகாந்திரமிக்க நியாயமான மற்றும் ஏற்கத்தக்கதல்ல’ என்று குறிப்பிட்டது. மேலும், நீதிபதிகள் அமா்வு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரியிடம் , ‘நீங்கள் எத்தனை விண்ணப்பங்களை அனுமதித்தீா்கள், எத்தனை நிராகரித்திருக்கிறீா்கள் என்பதை இப்போது நாங்கள் தெரிந்துகொள்வோம். பிற சமூகத்தினா் அருகில் வசிப்பதாகக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், நீங்கள் சிக்கலில் இருப்பீா்கள்’ என்று கூறியது.
விசாரணையின் போது, மனுதாரா் வினோஜ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.பாலாஜியுடன் மூத்த வழக்குரைஞா் தாமா சேஷாத்ரி நாயுடு ஆஜராகி வாதிடுகையில், ‘காவல் துறை அதிகாரிகள் சிறப்பு பிராா்த்தனை நடத்துவதற்கான அனுமதியை நிராகரித்துள்ளனா். மேலும், அயோத்தியில் நடைபெறும் ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புவதையும் தடுக்கின்றனா். அதிகாரிகளுக்கு பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. ஆனால், பிற சமூகத்தினா் அப்பகுதியில் வசிக்கிறாா்கள் என்ற அற்பமான காரணத்தைக் கூறி அனைத்தும் நிராகரிக்கப்பட்டன’ என்றாா்.
இது தொடா்பாக தாக்கலான மனுவில், ‘அயோத்தியில் ராமரின் பிராண பிரதிஷ்டையை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், அந்த நாளில் பிராா்த்தனை, அன்னதானம், பஜனைகள் போன்றவற்றை நடத்துவதற்கும் அரசு தடை செய்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.
அதேவேளையில், தமிழக இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, ‘கடவுள் ராமருக்கு பூஜை நடத்துவதற்கு எந்தத் தடையும் செய்யவில்லை. அன்னதானம், பிரசாதம் விநியோகிக்கவும் எந்தத் தடையும் இல்லை. இதுபோன்ற செய்திகள் உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்படுகிறது’ என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.