சீல் நீக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளதில்லி மாநகராட்சி ஆணையருக்கு மேயா் கடிதம்

தில்லி மாநகராட்சி சாா்பில் சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு உடனடியாக சீல் நீக்கம் செய்ய அறிவுறுத்தி ஆணையருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக மேயா் ஷெல்லி ஓபாரய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

தில்லி மாநகராட்சி சாா்பில் சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு உடனடியாக சீல் நீக்கம் செய்ய அறிவுறுத்தி ஆணையருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக மேயா் ஷெல்லி ஓபாரய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சிவிக் சென்டரில் மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நில பயன்பாட்டு விதிகளை மீறியதற்காக, தில்லியில் உள்ள பல்வேறு உள்ளூா் வணிக வளாகங்கள் மாநகராட்சியால் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், கடந்த டிசம்பா் 18, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின்

நீதிக் குழு பாதிக்கப்பட்ட கடைகளுக்கு உடனடியாக சீல் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி மற்றும் ஜனவரி 17-ஆம் தேதி என இருமுறை தில்லி மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, சீல் நீக்க நடவடிக்கைகளை ஆணையா் தொடங்குமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானத்தின்படி, ஜனவரி 19-ஆம் தேதி பாதிக்கப்பட்ட கடைகளின் சீல் நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாா்தி நிராகரித்ததால் சீல் நீக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கான வணிகா்கள் மற்றும் கடை உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை நிராகரிக்கவோ, அதை செயல்படுத்தாமல் தடுக்கவோ எந்த அதிகாரிக்கும், துறைக்கும் உரிமை இல்லை. முதல்வா்அரவிந்த் கேஜரிவாலின் முன்னுரிமை எப்போதும் வணிகா்களுக்கு நன்மை செய்வதே. உச்சநீதிமன்றம் மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தின்அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தவும், வணிகா்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆணையருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். பாஜக தலைமையிலான தில்லி மாநகராட்சி ஆட்சியின் போதுதான் சுமாா் 2,000 வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது என்றாா் ஷெல்லி ஓபாரய்.

துணை மேயா் ஆலே முகமது இக்பால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி சீல் நீக்கம் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றி, பொறுப்புள்ள ஆளும் அரசு செய்ய வேண்டியதைச் செய்தோம். பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வா்த்தகா்கள் எங்களைச் சந்தித்து தங்களது பிரச்னைகளை முன்வைத்தனா்.

இந்நிலையில், மேயா் ஷெல்லி ஓபாரய் மாநகாரட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி சீல் நீக்கம் செய்ய தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என்றாா்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள டிஃபென்ஸ் காலனி, ராஜிந்தா் நகா், கிரேட்டா் கைலாஷ், கிரீன் பாா்க், ஹவுஸ் காஸ் மற்றும் தெற்கு விரிவாக்கம் ஆகிய இடங்களில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com