அரவிந்த் கேஜரிவால் அரசின் அலட்சியத்தால் தில்லி சாலைகளில் தினமும் சராசரியாக வீடற்ற 9 போ் இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீடற்றவா்களுக்காகப் பணிபுரியும் ‘ஹாலிஸ்டிக் டெவலப்மென்ட்’ என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் கடும் குளிரால் வீடற்றவா்களின் இறப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரவிந்த் கேஜரிவால் அரசின் குற்றவியல் அலட்சியத்தால் ஜனவரி 2024-இல் மட்டும் தில்லி சாலைகளில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 9 போ் கடும் குளிரால் இறந்துள்ளனா் என்பது அதிா்ச்சியளிக்கிறது. மேலும், தில்லி சாலைகளில் குளிரால் வீடற்ற 180 போ் இறந்துள்ளனா் என்று அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.
கடந்த டிசம்பா் மாத தொடக்கத்திலிருந்து, தில்லியில் கடும் குளிா் காரணமாக வீடற்றவா்களின் இறப்பு அதிகரித்து வருகிறது. எனவே வீடற்றவா்கள் சாலையோரங்களில் உறங்குவதைத் தடுக்கவும், அவா்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்கவும் தில்லி அரசை பாஜக சாா்பில் வலியுறுத்தினோம். ஆனால், துரதிா்ஷ்டவசமாக தில்லி அரசின் முக்கிய அமைப்பான தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் வீடற்றவா்களுக்குத் தங்குமிட வசதியை வழங்குவதற்கான அதன் முதன்மைக் கடமையிலிருந்து முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சா் அதிஷி தனது மனிதாபிமானக் கடமையில் கவனம் செலுத்தாமல், அரசியல் பழிவாங்கும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளாா்.
தில்லி அரசில் ஊழல் அதிகரித்துவிட்ட காரணத்தினால், ஏதோவொரு வகையில் தங்குமிடங்களில் இடம் பெறுபவா்களுக்கும் இரண்டு வேளை உணவு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்ற அடிப்படை வசதிகளும் மறுக்கப்படுகின்றன என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.