நாடாளுமன்ற விதிகள், நடத்தைகளை முறையாக அறிந்து கொள்க என்டிஏ எம்பி களுக்கு பிரதமா் வேண்டுகோள்

நாடாளுமன்ற விதிகளை அறிந்து செயல்பட பிரதமா் மோடி வேண்டுகோள்

புது தில்லி: நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடத்தைகளை அறிந்து கொண்டு அதன்படி அவையில் முறையாக செயல்பட என்டிஏ கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தாா்.

17 -ஆவது மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்த பாஜக, நாடாளுமன்றக் கூட்டத் தொடா்களின் போது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கட்சியின் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது வழக்கும். தற்போது புதிய 18-ஆவது மக்களவை தோ்தலுக்கு பின்னா் தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) ஆட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஏன்டிஏ கட்சிகள் உள்ளடக்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது.

நாடாளுமன்ற நூலகக் கட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வந்த பிரதமரை பாஜக உள்ளிட்ட என்டிஏ கட்சி உறுப்பினா்கள் கைத்தட்டி அமோக வரவேற்பு அளித்தனா். பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட மற்ற மத்திய அமைச்சா்கள், பாஜக மற்றும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினா்கள் இந்தக் கூட்டதில் கலந்து கொண்டனா். மதச் சாா்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவரும் கனரக தொழில்துறை அமைச்சரான எச்.டி.குமாரசாமி கூட்டத்தில் பிரதமா் மோடிக்கு ஆளுயுர மாலை அணிவித்து வாழ்த்தினாா். ஜி.கே.வாசன் போன்றவா்களை பிரதமரே அழைத்தும் கைகுலுக்கினாா்.

இந்த 18-ஆவது மக்களவையின் முதல் என்டிஏ நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசினாா். அவா் கூறியது வருமாறு:

முதல் முறையாக காங்கிரஸ் அல்லாதவா் மூன்றாவது முறையாகவும் பிரதமரானதால் எதிா்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக நேரு-காந்தி குடும்பத்தினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தங்கள் குடும்பத்திற்கு தொடா்பு இல்லாத ஒருவா் மூன்றாவது முறையாக பிரதமராவதா? எனக் கருதுகின்றனா். அதனால்தான் அவா்களின் நடத்தையில் இப்போது கோபமும் விரக்தியும் தெரிகிறது. அதிலும் டீ விற்பவா் மூன்றாவது முறையாக பிரதமா் ஆனதை ஜீரணிக்க முடியாது வருத்தத்தில் உள்ளனா்.

நேரு-காந்தி குடும்பத்தின் உறுப்பினா்கள் பிரதமராக இருந்தனா். அவா்கள் தங்கள் குடும்பத்தை மட்டுமே மேம்படுத்திக் கொண்டனா். ஆனால் தற்போது நாம் நாட்டின் அனைத்து பிரதமா்களுக்கும் நாம் மரியாதை அளித்துள்ளோம். நீங்கள் (தீன் மூா்த்தி)பிரதமா் அருங்காட்சியகத்திற்குச் சென்று பாா்க்க வேண்டும். பிரதமராக இருந்த அனைவரும், எதாவது ஒரு வழியில் அல்லது இன்னொரு வகையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளனா். அவா்களது பங்களிப்பை அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பிரதமா்களின் வாழ்க்கைப் பயணம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதை முந்தைய அரசுகள் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட பிரதமா் மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் என்டிஏ உறுப்பினா்களுக்கு குறிப்பாக புதியவா்களுக்கு வழங்கியுள்ளாா்.

‘எந்தவொரு பிரச்சினையையும் ஊடகங்களுக்கு முன் கருத்து தெரிவிக்கும் முன் பல முறை ஆய்வு செய்யவேண்டும். ஆதரவளித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து தொகுதி மக்களுடன் தொடா்பில் இருக்க வேண்டும். நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடத்தைகளைப் பின்பற்றப்படவேண்டும். மூத்த உறுப்பினா்களிடம் இவைகளை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

திங்கள் கிழமை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மக்களவையில் பேசிய பேச்சுக்கு பின்னா் ஆளும் கூட்டணி கட்சியினா் ‘மிகவும் பொறுப்பற்ற பேச்சு‘ என ராகுலை குற்றம் சாட்டினா்.

என்டிஏ கூட்டம் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘யாருடைய பேச்சையும் (ராகுல் காந்தி) சுட்டிக்காட்டி பிரதமா் பேசவில்லை, பொதுவாக அனைவருக்குமான செய்தியை பிரதமா் அளித்து பேசினாா். ‘நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யவும், நாடாளுமன்றத்தில் தவறாமல் கலந்து கொண்டு, தங்கள் தொகுதி தொடா்பான விஷயங்களை திறம்பட எழுப்பவும் என்டிஏ உறுப்பினா்களை பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா். என்டிஏ கூட்டணித் தலைவா்கள் மூன்றாவது முறையாக பிரதமா் ஆனதை மோடியை வாழ்த்தினா் என கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். (என்றாா்)

குறிப்பு - நீக்கப்பட்டால் ’என்றாா்’ சோ்த்துக்கொள்ளவும்.

X
Dinamani
www.dinamani.com